தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது சமூகத்தில் பெரும் கவலைக்குரியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தாராபுரம் காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாராபுரம் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் விஜய சாரதி தலைமையில், காவல் சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்குமார், சிவராஜ், உதவி காவலர்கள் நவநீதகிருஷ்ணன், காளிதாஸ், சிவகுமார் உள்ளிட்டோர், தாராபுரம்–அலங்கியம் சாலை மற்றும் உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில், சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் பயணம் செய்தவர்கள் — தாராபுரம் எலீஸ் நகர், சூர்யா மருத்துவமனைக்கு பின்னால் வசித்து வரும் பழனிச்சாமி மகன் கோகுல் (22) மற்றும் தாராபுரம் மேற்கு பஜனை மட தெரு, சுரேஷ்குமார் மகன் பாலயுவராஜ் (22) என அடையாளம் காணப்பட்டனர்.
போலீசாரைக் கண்டு பதற்றம் அடைந்த இருவரும் தங்கள் வாகனத்தின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த பொருளை எறிந்து விட்டு தப்பிக்க முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை இடத்திலேயே பிடித்து விசாரித்தனர்.
பின்னர் வாகனத்தை சோதனையிட்டதில், டேங்க் கவருக்குள் 1 கிலோ 800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து, தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லரையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தாராபுரம் போலீசார் இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து, காங்கேயம் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நீதிபதி விசாரித்துப் பார்த்து, இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு போலீசார் எச்சரிக்கை:
“இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை யாரும் தாங்க முடியாது. தாராபுரம் பகுதியில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எவராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என காவல் ஆய்வாளர் விஜய சாரதி தெரிவித்தார்.