தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தின் 12 யூனியன்களைச் சேர்ந்த அணிகள் — ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, உடன்குடி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தார், கருங்குளம், புதூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகியவை கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தின.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஓட்டப்பிடாரம் யூனியன் அணி மற்றும் ஆழ்வார் திருநகரி யூனியன் அணி மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஓட்டப்பிடாரம் யூனியன் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று முதல் இடத்தை கைப்பற்றியது.
இரண்டாம் இடத்தை ஆழ்வார் திருநகரி யூனியன் அணி, மூன்றாம் இடத்தை திருச்செந்தூர் யூனியன் அணி, நான்காம் இடத்தை விளாத்திகுளம் யூனியன் அணி பெற்றன.
இதையடுத்து நேற்று (03.11.2025) வெற்றி பெற்ற ஓட்டப்பிடாரம் யூனியன் அணியினர் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர், மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவருமான இளையராஜா, அணி வீரர்களுடன் சென்று, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், மாவட்ட அமைச்சூர் கபடி கழகத் தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சன்மானம் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டினார். மேலும், மாவட்ட மட்டத்தில் திறமையாக விளையாடிய வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பிக்க வேண்டும் என்றும், அரசு மற்றும் கழகத்தின் சார்பில் அனைத்து வகையான ஊக்கமும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
போட்டிகளை சிறப்பாக ஒருங்கிணைத்த தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்வின் போது கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.