திருவாரூர் செய்தியாளர் வேலா, செந்தில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் அடக்கமான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு…
மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து சாதிமத பேதமின்றி அனைவரையும் அரவணைத்து அருளாசி வழங்கியதோடு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை தனது பார்வையால் குணமடைய செய்து வந்துள்ளார்.
இறுதியாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி வந்து தங்கிய அவர் அங்கேயே அடக்கமானார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தர்க்காவின் புனித கந்தூரி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரத ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை மீண்டும் மகான் அடக்கத் தலத்தை அடைந்து பின்னர் மகான் சமாதி மீது சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இத்தகைய பெருமை மிக்க கந்தூரி விழா ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்.