ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில், ஊர் பள்ளிவாசலில் இருந்து சந்தனகூடு துவா செய்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு நேற்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு முழுவதும் கிராம வீதிகளில் வலம் வந்து அதிகாலை, தர்ஹாவுக்கு வந்து அடைந்தது.
இந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மதத்தினர் பெரும்பாலோர் சென்னையில் வசித்து வந்தாலும் இந்த சந்தன கூடு திருவிழாவிற்கு அனைவரும் இக் கிராமத்திற்கு வந்து புத்தாடை அணிந்து திருவிழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் கிராமத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் ஏராளமானோர் மேளச்சத்தம் மற்றும் இறைபாடல் பாட்டுக்கு ஏற்றவாரு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.களிகம்பு நடனத்தில் சிறப்பு முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும் 12 களிகம்பு நடனம் ஆடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.இந்தக் களிக்கம்பு நடனம் மொத்தம் நான்கு இடங்களில் நடைபெற்றது.
இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சந்தன கூடுக்கு மலர்கள் கொடுத்து வழிபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் , சிறுவர், சிறுமியர் 1000 க்கும் மேற்பட்டோர் சந்தனக்கூடு விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.பின்னர் இன்று மதியம் கந்தூரி வைபவம் நடைபெற உள்ளது