குடவாசல், செப்.15:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் வடமட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.காமராஜ் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வடமட்டம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற இரா.காமராஜ் எம்எல்ஏ, அங்கு கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு காத்திருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் தொடர்பாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய அளவில் கொள்முதல் பணிகள் நடைபெறாததால், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நீண்ட நேரமாக அங்கேயே இருப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவ்வப்போது பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய்கள் கொண்டு மூடி வைத்திருந்தாலும், மழைநீர் உள்ளே புகுந்து நெல் மணிகள் ஈரமாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்தால் நெல் முளைத்து, தரம் குறைந்து, தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பாதுகாப்பான கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரா.காமராஜ் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த இரா.காமராஜ் எம்எல்ஏ, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையாமல் பாதுகாப்பதற்கும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதுகுறித்து இரா.காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது:…

அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காலதாமதமின்றி உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பான முறையில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். தற்போது நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், மழை பெய்யும் நேரங்களில் நெல் மணிகள் நனைந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.

விவசாயிகள் தங்களது விளைபொருளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. குறிப்பாக மழைக்காலம் என்பதால் நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுவதுடன், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடமட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்து, பாதுகாப்பான கிடங்குகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் வடமட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மழையால் விவசாயிகளின் விளைபொருட்கள் சேதமடைவதை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *