வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் இடைவிடாமல் 5மணி நேரம் மழை பெய்ததால்,பருத்தி வயலில் தண்ணீர் தேங்கி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் முன் கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதையடுத்து சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம் இல்லை. வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பு பருவத்தில் கடந்த ஆண்டைவிட சுமார் 1,500ஏக்கர் கூடுதலாக சுமார்
8,250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்க்கொள்ளுவதால் பருத்தி சாகுபடி இந்த ஆண்டும் கூடுதலாக நடைப்பெற்றது. கடந்த ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்வதற்காக விதைக்கும் பணி மேற்கொள்ளும் வகையில் போதிய இடைவெளியில் சிறிய அளவிலான பத்திகள் அமைத்து பருத்தி விதையை விதைத்து வந்தனர்.

இந்நிலையில் நடப்பு பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயலில் புழதி உழவு செய்தும், சில இடங்களில் சேத்து உழவு செய்தும் பின்னர் பருத்தி விதைப்பதின் மூலம் செடிகளின் வளர்ச்சி வேகம் அதிகம் இருப்பதாகவும், முளைப்புத் திறன் கூடுதலாக உள்ளதாகவும் களை நிர்வாகம் போன்றவற்றிற்கு ஆகும் செலவு குறைவாகவும் இருப்பதால் உழவு செய்து பருத்தி விதைகளை விதைக்கும் நடைமுறையை மேற்க்கொண்டனர். வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பருவ மழை போன்று பெய்து வருகிறது. அதன் காரணமாக பருத்தி செடி களை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுவாக பருத்திக்கு அதிக அளவு தண்ணீர் தேவை இல்லை.

ஈரம் மட்டும் இருந்தால் போதுமானது. இருவித்திலைத் தாவரமான பருத்தி செடிகளை சுற்றி இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் செடிகள் வாடல் நோயால் பாதிக்கும் என்பதால் பருத்தி விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மழைநீர் தேங்கியுள்ள பருத்தி வயல்களை நேரில் ஆய்வு செய்த வேளாண்மை துறையினர் கூறுகையில். பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, செடிகளுக்கு தேவையான ஆக்சிசன் கிடைக்க வில்லை. மேலும் சல்லி வேர்கள் தண்ணீரை உறிஞ்சவில்லை. நோய் தாக்கப்பட்ட பருத்தி வயல்களில், உடனடியாக தண்ணீரை வெளியேற்றி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பசுந்தாள் உரப்பயிர்களை இடை சுழச்சியாக சாகுபடி செய்ய வேண்டும். பிற செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க ன “டிரைக்கோடெர்மா விரிடி” என்ற மருந்தை இரண்டு கிராம் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளை சுற்றி ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் வாடல் நோயிலிருந்து பருத்தி செடிகளை மீட்கலாம் எனக் கூறி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *