செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவர் குமரவேல் ஆகியோரின் தேர்தல் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுராந்தகம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
தவெக வேட்பாளர் மீது புகார் மனு அளித்தார். புகார் மனுவில்,
வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது முந்தைய தேர்தல் ஆவணங்களில் வயது 44 என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போதைய வேட்புமனுவுடன் தாக்கல்
செய்யப்பட்ட படிவம்-26 (Form 26) ஆவணத்தில் வயது 43 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளரின் வருமானம் தொடர்பான விவரங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக
புகாரில் கூறப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டிற்கான வேட்பாளரின் வருமானம்
ரூ.4,98,700 என்றும், மற்றொரு ஆவணத்தில் ரூ.6,25,480 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2022-23 நிதியாண்டில் ரூ.4,14,500 மற்றும் ரூ.13,10,000 என வெவ்வேறு தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வேட்பாளரின் கணவர் தொடர்பான வருமானவரி விவரங்களிலும் முரண்பாடுகள் உள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே நிதியாண்டில் வெவ்வேறு வருமானத் தொகைகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஒரே நபருக்கு ஒரே நிதியாண்டில் இரண்டு விதமான வருமானவரி அறிக்கைகள் இருக்க முடியாது என்பதால், தேர்தல் ஆவணங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து உண்மையான சொத்து மற்றும் வருமான விவரங்களை உறுதி செய்ய வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகள் உறுதி செய்யப்பட்டால் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ள நிலையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீது வயது, வருமானவரி விவரங்களில் முரண்பாடு என புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *