ஆரோவில் காவல் நிலையத்தில் பால் விற்பனை டீலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டம் சேர்ந்தவர் சுப்பராயன் (52) இவர் கடலூர் மாவட்டம் வடலூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தனியார் பால் பண்ணை மூலம் பால் வாங்கி திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வானூர் இரும்பை கிளியனூர் ஆரோவில் பகுதியில் விற்பனை செய்து வந்தார்.
அதற்காக வடலூர் பால் கம்பெனி உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட கம்பெனியின் பால் சரியில்லை என வாடிக்கையாளர்கள் சுப்புராயனிடம் புகார் தெரிவிக்கவே அங்கு பால் வாங்க சுப்புராயன் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால் விற்பனையில் ஆர்வம் கொண்ட சுப்பராயன் கடந்த 2 நாட்களாக வேறு ஒரு கம்பெனி மூலம் பாலை கொள்முதல் செய்து திருச்சிற்றம்பலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பாலை விநியோகம் செய்து வந்துள்ளார். இதனை அறிந்த பழைய பால் கம்பெனி உரிமையாளர் இன்று காலை சுப்பராயனுக்கு போன் செய்து மிரட்டி உள்ளார்.

மேலும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு வந்து சுப்பராயனின் பால் ஏற்றி வந்த வாகனத்தை கடத்தியுள்ளனர். மேலும் பால் வாகனத்தில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பாலை சாலையில் கொட்டி உள்ளனர். இதனை தட்டி கேட்ட சுப்பராயனை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதுகுறித்து சுப்பராயன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பெட்ரோல் கேன் உடன் இன்று காலை சுப்புராயன் ஆரோவில் காவல் நிலைய வளாகத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *