திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி மாசடைந்தது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாமரை ஏரியை பாதுகாக்க கோரி அந்த பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு ஒன்று திரண்டனர். மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியில் கழிவு நீர் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏரியில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும், சரும நோய், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை தினந்தோறும் சந்தித்து வருவதாக பெண்கள் குற்றம் சாட்டினர். நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் பருக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்,
பணம் கொடுத்து குடிநீர் வாங்கி அருந்தி வருவதாக தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு உடனடியாக மாசடைந்துள்ள ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தாமரை ஏரியை தூய்மைப்படுத்திட வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும், அரசு நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்களே இயந்திரங்களைக் கொண்டு ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
செய்தியாளர் சீனிவாசன்.