பெரம்பலூர்.நவ.28. பெரம்பலூர் மாவட்டம், ஓகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் 100 நாள் வேலை வேண்டி கிராம மக்கள் சார்பாக பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 11 மாதங்களில் ஒரே ஒரு நாள் (27.11.2025) மட்டுமே வேலை கொடுத்தார்கள். மறுநாளில் இருந்து வேலை கொடுக்கவில்லை. இந்நிலையில், தொடர்ச்சியாக வேலை கொடுக்க வேண்டும் என்று பஸ் மறியல் போராட்டம் பொதுமக்கள் சார்பாக நடைபெற்றது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது நல்ல நிலையில் இருக்கும் தார் சாலைகளை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் சாலை போடுகிறார்கள். ஆனால் மிக மோசமான நிலையில் எங்கள் கிராமத்தில் சாலை இருக்கிறது என்று அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை பலமுறை மனு கொடுத்தும் இன்று வரை கேட்பாரற்று கிடக்கிறது.
தெருவிளக்கு சரிவர எரியவில்லை என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கழிவுநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிற்கிறது.மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்) கட்டுவதற்காக கட்டப்பட்ட பணிகள் பாதியிலேயே நிற்கிறது.பழைய நூலக கட்டிடத்தை மீண்டும் புதுப்பிக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இன்றுவரை திறக்கப்படாமலேயே கிடக்கிறது.
சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் இன்னும் அப்படியே கிடக்கிறது.சுடுகாட்டில் ஈமச்சடங்கு நடத்துவதற்காக போடப்பட்ட தகரக் கொட்டகை சரிந்து விழுந்து நான்கு மாதம் ஆகிறது. இன்றுவரை அவை சீர் செய்யப்படாமலேயே இருக்கிறது.இது எல்லாவற்றுக்கும் மேல் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தான் எங்களுக்கு அமைச்சராக இருக்கிறார். அவருடைய தொகுதியிலேயே இப்படி இருக்கிறது நிலைமை இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்