நெல்லையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தொடர்ச்சியாக தனது படங்களில் காட்சிப்படுத்தி வருகிறார்.

எனவே பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வரிசையில் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படமும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. அதே போல் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே, அவரது நடிப்பைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தைக் குறிப்பிட்டு, அந்தப் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கதாபாத்திரம் தான் இப்படத்தில் மாமன்னன் கதாபாத்திரம் என இயக்குநர் மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசினார். மேலும் தேவர் மகன் படம் தனது சிறு வயதில் மனதில் வலியை ஏற்படுத்தியதாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாமன்னன் திரைப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இது போன்ற சூழலில் நெல்லை மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குவோம் என பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பவானி வேல்முருகன் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசும் பவானி வேல்முருகன், “தற்போது தமிழ்நாட்டில் மாமன்னன் திரைப்படத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மாமன்னன் திரைப்படத்தை நெல்லை மாவட்டத்தில் திரையிட ஆயத்தமாகி வருகின்றனர். அந்தப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மீது நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். எனவே, மௌனம் காத்து வரும் காவல்துறைக்கு ஒன்றைக் கூற விரும்புகிறோம்.

நெல்லை மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டால் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் திரையரங்குகளை அடித்து நொறுக்கத் தயங்கமாட்டார்கள்” என்று ஆவேசமாகப் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *