அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று ஆஜரானார். சென்னை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவதூறு வழக்கு தொடர்பாக அண்ணாமலை ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்மையில் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் ஆணைப்படி, அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று ஆஜரானார். அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தபோது அண்ணாமலை கூறியதாவது:- ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெளியிட்டேன். அதனால் ஆளும் கட்சியில் பல பேருக்கு கோபத்தை உண்டாக்கியது. தி.மு.கவின் முதல்வரை உட்பட பல்வேறு தரப்பினர் ஆயிரம் கோடிக்கு மேல் கேட்டு நஷ்ட ஈடு வழக்கு தொடுத்து உள்ளது. அது தொடரபான வழக்கில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளேன். பா.ஜ.க. வழக்கறிஞர்கள் அணி பலமாக இருப்பதை இன்றுதான் பார்த்தேன். மீண்டும் ஆகஸ்டு மாதம் 3-வது வாரம் ஆஜராக சொல்லி இருக்கிறார்கள். ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக தி.மு.க. ஊழல் பட்டியல் சம்மந்தமான பாகம் இரண்டு தயாராக உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவிக்கப்பட்டு உள்ளது.

நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் தி.மு.க.வினருக்கு சொந்தமானவர்கள்தான். ரத்த சொந்தமும் இருக்கிறது. இது சம்பந்தமான புகைப்படங்களும் உள்ளன. தி.மு.க. ஊழல் பட்டியல் 2-வது பாகத்தை இந்த மாத இறுதியில் வெளியிடுகிறேன். ஊழல் பட்டியல் பாகம்-2 பாதயாத்திரைக்கு முன்பு ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும். தி.மு.க. பைல்ஸ் பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம் உள்ளனர். பினாமியின் பெயர்களை பொது வெளியில் சொல்வது குறித்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் பினாமி பெயரில் வாங்கி இருக்க கூடிய பட்டியலில் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் சிபிஐ வரக்கூடாது என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. இரண்டாம் ஊழல் பட்டியல் குறித்து ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *