புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு தனது செய்தி குறிப்பில் கூறியதாவது புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை சார்பில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தி அதன்மூலம் மின்சார கட்டணம் வசுலிக்கபடும் என்று அறிவிப்பு வந்ததிலிருந்து இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

இது சம்பந்தமாக பொதுநல அமைப்புகள் சார்பாக எனது தலைமையில் மின்துறை மற்றும் புதுவை அரசை கண்டித்து போராட்டம் நடத்தி கவர்னர், முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் புதுச்சேரி மாநிலத்தில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் செயலை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி தற்போது பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவதற்கு அரசின் நிதியை ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவிட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிந்த மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இது புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது.
மின்துறையை தனியாருக்கு ஒப்படைக்க முடிவு செய்து அதன்படி மின்கட்டணத்தை பல மடங்கும் உயர்த்தியும், உபயோகப்படுத்தாத மின்சாரத்திற்கு connected load charges,
sur charges போன்ற வகைகளில் நூதனமாக பல வரிகளை திணித்து மின்நுகர்வோரான பொதுமக்களை வஞ்சிக்கும் செயலில் இந்த அரசும், மின்துறையும் ஈடுபட்டு இருக்கும் இந்த வேளையில் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தி பல பிரிவுகளாக மின் கட்டணத்தை முன்கூட்டியே வசுலிக்க அரசு முடிவெடுத்துள்ளது கண்டிக்கதக்கது.

புதுச்சேரியில் தற்போது நல்ல லாபத்தோடு இயங்கிவரும் மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலில் அரசு ஈடுபட்டபோது பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல போராட்டங்களை நடத்தினர்.

அதேபோல மின்துறை ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தி அதன் ஒரு பகுதியாக மின்துறை ஊழியர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து அரசு சார்பிலும் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
அந்த வழக்குகளை நிலுவையில் உள்ளது. இப்படி அரசுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்த நிலையில் இதற்கு தீர்வுகாண மின்துறையை தனியாருக்கு ஒப்படைக்கும் செயலில் மாற்றம் செய்யும் விதமாக 51 சதவீதம் பங்கு தனியாருக்கும், 49 சதவீதம் பங்கு அரசுக்கும் என்ற விகிதாரசார அடிப்படையில் முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் முடிவு எட்டப்பட்டது.

முடிவு செய்யப்பட்ட மேற்கண்ட நிலையை உயர்நீதிமன்றத்தில் தெரியபடுத்தி வழக்கை முடித்து கொள்ள ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அது சம்பந்தமாக எந்த விதமான தகவலும் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் அரசு எடுத்த முடிவு கிடப்பில் கிடக்கிறது.

தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுழ்நிலையில் எந்த முடிவும் சுமுகமாக இல்லாத இந்த வேளையில் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்துவதற்கு அரசு ஆர்வம் காட்டுவது மர்மாக உள்ளது.

இதற்கு கவர்னர், முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால் நம் புதுச்சேரி மாநிலம் தமிழக பகுதியை ஒட்டி இரண்டற கலந்துள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் இப்படிபட்ட பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தி மின்கட்டணத்தை முன்கூட்டியே வசுலிக்கும் செயல் இல்லாத நிலையில் புதுச்சேரி வாழும் மக்களுக்கு மட்டும் இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றதாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் நகர மற்றும் கிராமபுறங்களில் அடித்தட்டு மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும். பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தி மின்கட்டணம் முன்கூட்டியே வசுலிக்கும் நிலை வந்தால் பெருபான்மையான ஏழை எளிய மக்களின் வீடுகள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் அவர்கள் பயன்படுத்த கூடிய மின்சாரத்தின் அளவு மாதாமாதம் மாறுபடும். இதை அவர்கள் கண்காணிக்க முடியாது. தினமும் அவர்கள் கைப்பேசியில் பார்ப்பது போல மின் மீட்டரை பார்த்து கொண்டு இருக்க முடியாது.

அதேபோல குடும்பதலைவர்கள் நீண்ட நாள் வெளியுர்களுக்கு சென்றுவிடும் சுழலில் மின்சார பயன்பாட்டை கண்காணிக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட வேளையில் எவ்வளவு மின்சாரம் அந்த குடும்பத்தில் பயன்படுத்தினார்கள் என்பது அவர்களுக்கு தெரியவராமல் போய்விட்டால் மின்துண்டிப்பு ஏற்பட்டு அந்த குடும்பம் அவதிக்குள்ளாகும்.

அதே போல வயதான பெரியவர்கள் உள்ள வீடுகளிலும் மேற்கண்ட நிலைமையே ஏற்படும் படித்த இளைஞர்களுக்கு புதுச்சேரியில் வேலைவாய்ப்புகள் இல்லாத சுழ்நிலையில் சொற்ப ஊதியத்திற்கு தினகூலிகளாகவும், மாத சம்பளத்திற்காகவும் கிடைக்கின்ற வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வதுடன் பல கடன்களை பெற்று தவணை செலுத்தி வருகிறார்கள்.

பட்ட கடன்களுக்கே தவணை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகும் இவர்கள் எப்படி மின்சாரத்திற்கு முன்கூட்டியே பணம் செலுத்த முடியும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தின் நிலை என்ன என்று தெரியவில்லை.

இந்த அரசு மக்களுக்கு முதலில் தடையில்லா மின்சாரம் வழங்க முடிவு எடுக்க வேண்டும். அதற்காக மின்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அங்கு நிலவும் ஆள் பற்றாக்குறை போக்க காலியாக இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முன்வர வேண்டும்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் இந்த சுழ்நிலையில் தற்போது மூடப்பட்டு இருக்கும் சுதேசி, பாரதி, AFT போன்ற பஞ்சாலைகளை இப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு லாபகரமாக இயங்கும் மின்துறையை தனியாருக்கு ஒப்படைக்க ஏதுவாகவும், அந்த தனியார் லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரீபெய்டு மின்மீட்டர் திட்டத்தை கொண்டுவர துடிக்கும் இந்த அரசுக்கு பொதுமக்கள் எதிர்ப்பாளராக மாறுவார்கள் என்பது நிச்சயம்.

எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளிக்கும் முன் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியபடுத்திருக்க வேண்டும். அவர்கள் மூலம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது ஏற்புடையதா ? இல்லையா ? என்பதை அரசு அறிய வேண்டும்.

ஆகையால் சட்டமன்ற உறுப்பினர்களிடமும், பொதுமக்களிடமும் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல் இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்துவது ஜனநாயக விரோத செயலாக உள்ளது.

ஆகையால் இந்த பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் இல்லையென்றால் பொதுநல அமைப்புகளுடன் சேர்ந்து பாதிக்கப்படவிருக்கும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *