நூல் ஆசிரியர் : திரு. க. முருகேசன் !


கவின் கணினி அச்சகம், 59, கீழக்கடைத் தெரு, விருதுநகர் 626 001.
அலைபேசி : 97909 27404 விலை : ரூ. 60


   அட்டைப்பட வடிவமைப்பு மிக அருமை.  வான்புகழ் வள்ளுவர் தொடங்கி கம்பன், அவ்வை, இளங்கோ முதல் கவியரசு கண்ணதாசன், ஜெயகாந்தன் வரை ஓவியம் அற்புதம்.  உள் அச்சு யாவும் மிக நேர்த்தி. பாராட்டுக்கள்.  தமிழறிஞர் க. திருமாறன் உள்ளிட்ட பலரின் அணிந்துரையும், வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளன.

   ஈழத்து எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ‘தமிழென் அன்னை’ என்ற கவிதையோடு தொடங்கியது சிறப்பு.  அவர்தான் ‘தமிழா நீ பேசுவது தமிழா?’ என்ற கேள்வி கேட்டு தமிழரை சிந்திக்க வைக்கிறார்.

   நம் மொழி... செம்மொழி என்ற முதல் கட்டுரையில் உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.  உலகில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்பதை விளக்கியது சிறப்பு.  சங்க இலக்கியங்கள் என்ற சொத்துக்கள் நிறைந்த மொழி தமிழ் என்பதை உணர்த்தி உள்ளார்.

   தமிழர்களில் பலருக்கு முன்னெழுத்தில் ஆங்கிலத்தில் விடுவதற்கு மனம் வருவதில்லை.  தமிழருக்கு இரண்டு மொழிகளில் பெயர் என்று ஒரு புதுக்கவிதை பாடினான்.  இந்நிலை மாற வேண்டும் என்பதை வலியுறுத்து உள்ளார்.

   “ஒரு சிலர் பெயரைத் தமிழிலும், முன்னெழுத்தை (initial) ஆங்கிலத்திலும் கையொப்பமிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.  இதுவும் பிழையே ஆகும்.  முன்னெழுத்து, பெயர் ஆகிய இரண்டினையும் தமிழிலேயே எழுதுங்கள்”.

   இன்னும் சிலர் கையெழுத்தை ஆங்கிலத்திலேயே இடுகின்றனர்.  பொது நூலகத்தில் வருகைப்பதிவு கையொப்பம் பார்த்தாலே இது விளங்கும். 

   தமிழன் என்று சொல்லடா 
   தலை நிமிர்ந்து நில்லடா 
   ஆங்கிலக் கையொப்பாம் ஏனடா ?

என்ற எனது ஹைக்கூ நினைவிற்கு வந்தது. தமிழர்கள் அனைவரும் தமிழில் தான் கையொப்பம் இடுவோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். ஆங்கிலேயர் யாராவது தமிழில் கையொப்பம் இடுவார்களா? சிந்திக்க வேண்டும்.

   தங்களை குழந்தைகள் டாடி, மம்மி என்று அழைப்பதை பெருமையாக, நாகரீகமாகக் கருதிடும் பெற்றோர்களுக்கு உணர்த்தும் வண்னம் உள்ள கருத்துக்கள் நன்று.

   “அம்மா-அப்பா என்று அழைப்பதிலுள்ள உயிர்த்துடிப்புள்ள பாசம், மம்மி, டாடி என்று அழைப்பதி வருகிறதா? மம்மி, டாடி என்று அழைத்தால் குழந்தை நன்றாகப் படிக்கிறது என்று பொருளாம்! இது பொருளல்ல! மனத்தில் மூண்டுள்ள இருள், தாய்த் தமிழுக்கு மூட்டப்படும் தீச்சுருள்”

   இப்படி, சிந்திக்கும் வகையில் தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும், தமிழை சிதையாமல் காக்க வேண்டிய கடமை பற்றியும் நன்கு எழுதி உள்ளார்.  நூலாசிரியர் க. முருகேசன் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு தலைவணக்கம்.  பாராட்டுக்கள்.

   இன்று தமிங்கிலம் பேசுவது தான் நாகரிகம் என்று தவறாகப் புரிந்து கொண்டு தமிங்கிலம் பேசி வருகின்றனர்.  ஊடகங்களிலும் தமிங்கிலம் பரப்பி வருகின்றனர்.  இயன்ற வரையில் இனிய தமிழ் பேசுங்கள் என்ற நூலின் தலைப்புக்கு ஏற்ப கருத்தை வலியுறுத்தி உள்ளார்.  காலத்திற்கேற்றவாறு வந்துள்ள நல்ல நூல் இது. இந்நூல் படித்தால் தமிங்கிலம் பேசிட கூச்சம் வரும்.  நல்ல தமிழ் நாவில் வரும்.  நம் தமிழ் சிதையாமல் காக்கப்படும். தேவை நினைப்பும், முயற்சியும் என்கிறார்.  இருந்தால் நல்ல தமிழ் நன்கு பேசலாம், தமிங்கிலத்திற்கு முடிவுரை எழுதிடலாம்.

   “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
   மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். தமிழை மங்க விடாமல் காப்பது தமிழர்களின் கடமை என்பதை “பைந்தமிழின் ஆக்கமும், பாவேந்தரின் தாக்கமும்” கட்டுரையில் உணர்த்தி உள்ளார்.
சின்னச்சின்ன கட்டுரைகளின் மூலம் தாய்மொழிப்பற்றை, தமிழ்மொழிப்பற்றை நன்கு உணர்த்தி உள்ளார்.
துருப்பிடிக்க விடலாமா? கட்டுரையில் வழக்கொழிந்து விட்ட தமிழ்ச்சொற்களை பட்டியலிட்டு வழக்கப்படுத்தி விட்ட ஆங்கிலச்சொற்களை உச்சரிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு விதைத்த விதம் நன்று.

   இப்பொழுது உணவு விடுதி, திருமண வீடு போன்ற இடங்களில் பலர், ‘சோறு போடுங்க’ என்று கேட்பதில்லை, ‘ரைஸ் போடுங்க’ என்கிறார்கள்.

   ரைஸ் (RICE) என்பது அரிசியை அல்லவா குறிக்கும்? எனவே இலையில் அரிசியை போட்டு விடலாமா? அரிசியை அப்படியே சாப்பிட முடியுமா?

   பொருள் புரியாமலே சிலர் தமிங்கிலம் பேசிடும் அவலத்தை நன்கு சுட்டி உள்ளார்.

   நல்ல தமிழ்ச்சொற்களைக் கொண்டு பிறரோடு உரையாடவும், பிறர் பின்பேசிடவும் வேண்டும் என்று நம் உடம்புக்கு அமுதமாக விளங்கும் என்கிறார் ஆசிரியர் க. முருகேசன்.  நல்லதமிழ் பேசினால் வாழ்நாள் கூடும் என்கிறார்.

   ஒற்றுப்பிழை குறித்த விழிப்புணர்வும் விதைத்து உள்ளார்.  ‘கடைப்பிடி’ என்பதை கடை பிடி என்று எழுதினால் பொருள் மாறி விடும். எனவே கவனமாக எழுதுங்கள் என்கிறார்.

   ஊடகங்களா? கேடகங்களா? என்ற தலைப்பிட்டு தமிழ்க்கொலை புரியும் ஊடகங்களுக்குக் கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.  நிகழ்ச்சிகளின் தலைப்புகளே ஆங்கிலத்தில் காட்டும் அவலத்தை கண்டித்து உள்ளார்.

   தமிழகத்தில் வணிக நிறுவன்ங்களில் தமிழ் இல்லையே என்ற ஏக்கத்தையும் எழுதி உள்ளார். ஆலயத்தில் கருவறையில் தமிழ் இடம்பெறவில்லை என்ற வேதனையை நொந்து எழுதி உள்ளார்.  தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டாதது குறித்தும் கவலை தெரிவித்து உள்ளார். உலகப்பொதுமறையில் உள்ள அறிவியல் கருத்துக்களை விளக்கி உள்ளார்.  சொல்வளம் மிக்கது தமிழ்மொழி ஏன்? கைஏந்த வேண்டும் பிறமொழியில் என்று கடிந்து உள்ளார்.  ஒலிநயம் பற்றியும் எழுதி உள்ளார்.

   இரண்டு பேர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்ற இழிநிலை மாற வேண்டும்.  தமிழர்கள் தமிழர்களோடு தமிழிலேயே பேசுங்கள்.  உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழிக்கு ஈடு இணையாக உலகில் வேறு எந்த மொழியும் இல்லை.  தமிழராகப் பிறந்ததற்காக தமிழர்களே பெருமை கொள்ளுங்கள்.  தமிழில் பேசுவதை பெருமையாகக் கருதுங்கள் என்பதை உணர்த்திடும் நல்ல நூல்.

   குறிக்கோள்கள் 10 எழுதி தமிழ்மொழி காக்க வழிகள் எழுதி உள்ளார்.  நன்று.  இறுதியாக பயனுள்ள சொற்பட்டியலும் உள்ளது.  நூலாசிரியர் க. முருகேசன் அவர்களின் தமிழ்ப்பற்று பாராட்டுக்குரியது. விழிப்புணர்வு விதைத்தது.  மிக நன்று.

தமிழ் மொழிப் பற்று மிக்க இந்நூலை விமர்சனயத்திற்காக என்னிடம் வழங்கி தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கு நன்றி .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *