சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் +2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை முதலிடம்.

பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன் என பூங்கோதை தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சிஅடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர்.

இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.

மாணவி பூங்கோதை கூறினார்:
ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டி அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி பூங்கோதைக்கு உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்பதாக எத்திராஜ் கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதைக்கு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் முரளிதரன் நேரில் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *