தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் கோடை காலங்களில் அதிக வெப்பநிலையால் வரும் நோய்களை கண்டறிந்து அதனை சரி செய்வதற்கு குளிர்சாதன வசதியுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தினால் தீவிர வெப்ப நிகழ்வுகள் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக் ) போன்ற பல்வேறு வெப்ப அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது வெப்பம் தொடர்பான மிகவும் தீவிரமான கோளாறு. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது. உடல் வெப்பநிலை வேகமாக உயர்கிறது, வியர்வை பொறிமுறை தோல்வியடைகிறது இதனால் பாதிக்கப்பட்ட பலர் நாள்தோறும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது போன்ற அதிக வெப்ப நிலையால் கோடைகாலங்களில் வரும் நோய்களை கண்டறிந்து அதனை சரி செய்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வழிகாட்டுதலின்படி, இணை இயக்குனர் பிரேமலதா ஆலோசனையின் படியும், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் தீவீர முயற்சியாலும் ,குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 16 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

எனவே தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெப்பத் தாக்கத்தினால் உண்டாகும் பாதிப்புகளுக்கு தேவையான அவசரகால முதலுதவி மருந்துகள் தயார் நிலையில் உள்ளது . எனவே பொதுமக்கள் வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு களை நினைத்து அச்சப்பட தேவையில்லை , முடிந்த வரை அதிக நேரம் நேரடியாக வெயிலில் நிற்க்காமல் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறது .

உடல் சூடு இருப்பவர்கள் முதலில் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் சூடு குறைவதுடன், இன்னும் பல பிரச்னைகளும் குறையும். அடிக்கடி காற்றாட வெளியே செல்லுங்கள். வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகம் உள்ளேயே, புழுக்கத்திலேயே இருக்காதீர்கள். அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டு இயற்கையான குளிர்ந்த காற்றை உடலுக்குக் கொடுங்கள்.

குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளியுங்கள். உடல் சூடு இருப்பவர்கள் வெந்நீர், சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கும்போது, வெளிப்புறமாக உடல் சூடு அதிகமாவதைத் தடுக்கலாம். குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கட்டி கொண்டு உடலின் முக்கியமான புள்ளிகளான மணிக்கட்டு, கழுத்து, நெஞ்சுப் பகுதி போன்ற வற்றில் ஒற்றி எடுங்கள். இவை உடலின் உள்ளே மிக விரைவாக குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

இயல்புக்கு அதிகமாக வெப்பமாக உள்ள இடத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதை, உடலுக்கு அதிகமான வேலைகளைக் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். முடிந்தவரை காற்றோட்டமான இடத்தில் இவற்றையெல்லாம் செய்யும்போது உடல் வெப்பம் அதிகமாகாமல் இருக்கும்.

சில வகை துணிகள், வெப்பம் மிக எளிதாக உடலுக்குள் செல்ல இடம் அளிக்கக்கூடியது. குறிப்பாக, அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற செயற்கை துணிகளைத் தவிர்க்கவும். மாறாக, பருத்தி மற்றும் கைத்தறி துணிகள் உடலில் இருந்து வெப்பத்தை எளிதாக வெளியேற்ற அனுமதிக்கும். அதனால் காட்டன் மற்றும் கதர் உடைகள் போன்றவற்றை அணியலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டை குறைக்க மிக நல்ல வழி. உடலில் ஏதாவது பிரச்னை உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். சில உடல் பிரச்னைகளுக்கு எண்ணெய்க் குளியலை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் சூடு பிரச்னை உள்ளவர்கள், கண் வலி, கண் எரிச்சல், தலைவலி, வெள்ளைப்படுதல் போன்ற பிற பிரச்னைகளையும் கொண்டிருந்தால், அது சிகிச்சை தேவைப்படும் நிலை. எனவே, காரணத்தை அறிய தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும்,
பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்க மேற்காணும் வழிமுறைகளை பின்பற்றுமாறு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் கேட்டுக்கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *