பெரம்பலூர். நவ. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி (01.11.2025) பார்வையிட்டார்.


 தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சிகிச்யினை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு இலவச தரமான மருத்துவ சிகிச்சையினை அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து வழங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “நலம் காக்கும் ஸ்டாலின்”  என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ
முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து பயன்பெறுகிறார்கள்.  

 இம்முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. மேலும் பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள்  எந்த விதமான சிகிச்சை பெற வந்திருக்கிறார்கள் என்று கேட்டு அறிந்து அந்த சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவரின் அறைக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்றும், முகாமிற்கு வரும் பொதுமக்களின் தகவல்களை முறையாக பதிவேடுகளில் பதிவு செய்கிறார்களா என்றும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் அனைவரும்   பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என  தெரிவித்தார்.

இன்றைய முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மடக்கு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி நபருக்கு உடனடியாக ரூ.15,600 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, 3 நபர்களுக்கு ரூ.75,000 மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிக்கான ஆணையினையும், 3 நபர்களுக்கு ரூ.12,000 மதிப்பிலான  காதொலி கருவியினையும், 17 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையினையும், 5 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 2 நபர்களுக்கு இரத்த பரிசோதனைக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில்   மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *