மன்னார்குடி,
பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் .

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் பங்கேற்றனர். 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டிகளில் முதல் முறையாக இந்த ஆண்டு கபடி சேர்க்கப் பட்டது. ஆண்கள் பிரிவில் 14 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொண்டன.
இந்திய ஆண்கள் அணியில் தமிழ்நாட்டில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் ஆசிய அளவிலான கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த வீரரான அபினேஷ் மோகன்தாஸ் இந்தியாவிற்காக விளையாடி தங்கபதக்கம் வென்றது வடுவூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .
அபினேஷ் தனது சொந்த ஊருக்கு நேற்று மாலை வந்தார் அவருக்கு தொழி்ல்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக சால்வை , சந்தனமாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார் .
அதனை தொடர்ந்து கிராமமக்கள் மேளதாளங்கள் முழங்க வடுவூர் கடைதெருவில் இருந்து அவரது சொந்த கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று. வடுவூர் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது .