கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பாஜக மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், நாளை தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர், தமிழகத்திலே மிகவும் பாதுகாப்பான நகரம் என கருதப்பட்ட கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளதாகவும், பெண்களை பாதுகாப்பதாக கூறும் திராவிட மாடல் திமுக அரசின் தோல்வியை இச்சம்பவம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

மேலும், மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இது போன்ற பாலியல் சம்பவங்களுக்கு காரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதாகவும், கோயம்புத்தூரில் போதை பொருட்கள் அதிகமாக புலங்குவதாகும், அதனை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்.

மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர் மீது குண்டர் சட்டம் மற்றும் தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசியபோதும் மாநில அரசு சார்பில் உரிய பதில் தரப்படவில்லை எனவும், பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதை செய்யாத போது உரிய பாதுகாப்பு விஷயங்களை பெண்களே தான் முன்னெச்சரிக்கையாக செய்து கொள்ள வேண்டிய நிலை தமிழகத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *