தொட்டில் குழந்தை!
நூல் ஆசிரியர் : திராவிடக் கண்ணன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பாவை மதி வெளியீடு, 55, வ.உ.சி. நகர், மார்க்கெட் தெரு, தண்டார்பேட்டை, சென்னை – 81.
பக்கங்கள் : 96, விலை : ரூ.90***நூல் ஆசிரியர் திராவிடக் கண்ணன் அவர்கள் தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த திராட்சை தோட்ட தொழிலாளி. முகநூல் நண்பர். எனது நூல் மதிப்புரைகளைப் படித்துவிட்டு அலைபேசியில் தொடர்பு கொண்டு முகவரி பெற்று இந்நூலை அனுப்பி வைத்தார்.
எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மிக எளிய நடையில் 14 சிறுகதைகள் எழுதி உள்ளார். சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு கதையிலும் வாழ்வியல் உண்மைகளை, கசப்புகளை நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். இந்நூலை அம்மா மாரியம்மாளுக்கும், அப்பா வீருசிக்கும் காணிக்கையாக்கி பெற்றோரை பெருமைப்படுத்தியது சிறப்பு.
எழுத்தாளர் க.அழகேசன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். பதிப்பாளர் பாவையர் மலர் ஆசிரியர் இனிய தோழி வான்மதி பதிப்புரை வழங்கி உள்ளார். நூல் ஆசிரியர் திராட்சை தோட்டத் தொழிலாளி என்பதால் நேரில் கண்ட, உணர்ந்த உண்மைகளை கதைகளாக வடித்து இருப்பதால் இயல்பான கிராமிய மொழியிலேயே வந்துள்ளது. இக்கதைகள் அரசமரம், புதிய உறவு போன்ற இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. கொடைக்கானல், பண்பலை வானொலியிலும் ஒலிபரப்பாகி உள்ளன.
சுமைதாங்கி என்ற முதல் கதை விவசாயத்தில் கூலி குறைவாக வழங்குகின்றனர் . உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கேரளா வரை பயணம் செய்து வேலை பார்த்து வருவது, காவலர்கள் இலஞ்சம் பெறுவது என நாட்டு நடப்பை படம்பிடித்துக் காட்டி வெற்றி பெற்றுள்ளார்.
‘குப்பைத் தொட்டி’ கதையில் குப்பைத்தொட்டி எத்தனை பேருக்கு எத்தனை விதமாக பயன்படுகின்றது என்பதை விளக்கி குப்பைத் தொட்டியைப் பற்றி ஆய்வே நடத்தி உள்ளார், பாராட்டுக்கள்.
‘முதிர்கன்னி’ கதையில் வயதுக்கு வராத முதிர்கன்னி கண்டெடுத்த குழந்தையை வளர்த்தல், ஆதரவற்றோர் இல்லம் நடத்துதல் என சமூக விழிப்புணர்வு விதைத்து உள்ளார்.
‘சொந்தக்காலில் நில்லு’ கதையில் எறும்பின் சுறுசுறுப்பு பட்டாம்பூச்சியின் படபடப்பு தேனீயின் உழைப்பு எல்லாம் உணர்த்தி உள்ளார்.
‘ஈழத்துப் பெண்’ கதையில் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர், சில வருடங்கள் கழித்து ஏற்று, பாசம் மழை பொழியும் நிகழ்வை காட்சிப்படுத்தி உள்ளார்.
‘வெட்டியான்’ கதையில் பீடி குடித்தல், மது அருந்துதல், கந்துவட்டிக்குக் கடன் வாங்குதல் என அவர்களின் வாழ்வின் கொடுமைகளை நன்கு உணர்த்தி உள்ளார். சாராயத்தில் நஞ்சு கலந்து இருந்ததால் சாராயம் குடித்தவர்கள் இறந்தனர். வெட்டியானும் இறக்கிறான். ஊரில் பீடி, சிகரெட், மது, சாராயத்திற்கு தடை விதிக்கின்றனர்.
‘சுருளி அருவி’ என்ற கதையில் ஒரு திருடன் கதையையும், ஆற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய நல்ல குணம் அவனை செய்யாத கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலை என புலனாய்வு கதையாக வடித்துள்ளார்.
‘தனிமை’ என்ற கதையில் ஒரு குடும்பத்தில் கணவன் இறந்து மனைவி வாழலாம். ஆனால் மனைவி இறந்து வாழும் கணவன் வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை என்ற உண்மையை எழுதி உள்ளார். குடும்பத்தை வெறுத்து சாமியாராக மாறிய சக்திவேல் இறந்து விட்டதாக எண்ணி அவரிடமே வந்து அவரது குழந்தைகள் திதி கொடுக்க வேண்டும் நிகழ்வு நெகிழ்வு. பெற்றோரிடம் பாசம் காட்ட வேண்டும், பரிவு காட்ட வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார்.
‘அரசமரம்’ கதையில் அரசமரம் பேசுவது போலவே எழுதி இருப்பது நல்ல யுத்தி. அரசமரத்தின் பல்வேறு பயன்களை அழகாக பட்டியலிட்டு உள்ளார். இயேசுவிற்கு சிலுவை, காந்தியடிக்கு துப்பாக்கிக் குண்டு என பட்டியலிட்டு அரசமரம் போன்ற நல்லவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என ஒப்பீடு செய்துள்ளார்.
‘கூத்தனாட்சி’ கதையில் கூத்தன் ஆச்சி என்ற கதையைச் சொல்லி கோயில் கட்டியுள்ள, கேள்விப்பட்ட கதையை அப்படியே வடித்துள்ளார்.
‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற கதையில் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்து இயம்பி உள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ் வழி பயின்ற மாணவர் என்பதை எழுதி உள்ளார். மாவட்ட ஆட்சியர் தனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் தன்னிடம் உதவி கேட்டு வந்ததைக் கண்டு நெகிழ்ந்து தன் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கு ஊதியமாக பணம் வழங்கி உதவுவதாக காட்சிகள் வருகின்றன.
‘முதல் பட்டதாரி’ கதையில், பெண் பிறந்ததற்காக வருந்துவதாகவும் பின் மனதைத் தேற்றி அவளை பட்டதாரி ஆக்க வேண்டும் என்ற கடும் முயற்சி செய்கிறான் தந்தை. ஆனாலும் அலைபேசி வருகையின் காரணமாக காதல் வயப்பட்டு காதலனுடன் மகள் ஓடிப்போக ஓடுகாலியைப் பெற்றவன் என்று ஊர் பட்டம் தருவதாக கதை எழுதி உள்ளார்.
நாட்டு நடப்புகளை, பெண்குழந்தை வளர்ப்பில் உள்ள இடர்பாடுகளை சமூகம் கெட்டுப் போய் உள்ள சூழ்நிலையை கதையின் மூலம் நன்கு விளக்கி உள்ளார்.
அரசுத் தொட்டில் குழந்தை, கருணைக் கொலை கதையும் நன்று. மொத்தத்தில் 14 சிறுகதையின் மூலம் சமூகத்தை உற்றுநோக்கி நாட்டு நடப்பை, கண்ட நிகழ்வுகளை கதையாக்கி உள்ள நூல் ஆசிரியர் திராவிடக் கண்ணன் திராட்சை தோட்டத் தொழிலாளி வழங்கி உள்ள திராட்சைப் பழமே இந்நூல்.
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *