கவிச்சுவை!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,

மதிப்புரை : மு. அழகுராஜ், 94435 29314
மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

தெய்வப்புலவர் திருவள்ளுவர் இரண்டடிகளால் குறட்பாக்களைப் படைத்து, இவ்வுலகை அளந்தார் என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை. அவ்வாறே ‘கவிச்சுவை’ நூலினை இரண்டடிகளால் வெண்செந்துறை யாப்பு வடிவத்தில் சுவைபட அமைத்துள்ளார்.

பாரதநாடு வளம்பெற பாடுபட்டோர், தமிழ்நாட்டை ஆட்சி செய்த முந்தைய முதல்வர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வீரமங்கைகள், விஞ்ஞானிகள் ஆகியோரைப் பற்றிய படைப்புகள் புதுமையாக உள்ளது.

தற்கால சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மழை, பரிதி, நிலவு, மண், ஆறு போன்ற இயற்கை நிகழ்வுகளையும், கவிதை வடிவில் நூலாசிரியர் நயத்துடன் படைத்துள்ளார்.

காந்திக்கு ஒரு கடிதம் எனத் தொடங்கி எது கவிதை? என எழுபத்தெட்டு தலைப்புகளில் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகிம்சையே அகிலத்தை ஆளும் எனத் தொடங்கி எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ அதுவே கவிதை என புதுஇலக்கணம் கண்டுள்ளார். காந்தி அவர்கள் ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை’யில் சபதம் எடுத்தார், அரையாடை அணிதல் இக்கால இளைஞர்கள் அறிய வேண்டிய ஒன்று.

இந்தியாவின் முதல் குடிமகனும், மூத்த குடிமகன் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது.

வாய்மை, நேர்மை, எளிமை
மூன்றும் இருந்தால், வையத்தில்
நீங்களும் ஆகலாம் கலாம்.

கோடி கோடியாக ஊழல் செய்யும் இக்காலகட்டத்தில் பெரியார் பாராட்டிய பச்சைத் தமிழர் காமராசரின் ஆட்சி பற்றி அருமையாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.

மேலும்,

‘அன்னையே கேட்டபோதும் முப்பது ரூபாய்
அதிகம் வழங்கிட சம்மதம் தராதவர்’

என காமராசர் பற்றி கூறியது வியப்பு அளிக்கின்றது.

  பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவாக விரிவாக்கம் செய்த ‘எம்,ஜி.ஆர்’-ன் கொடைவள்ளலைப் பாராட்டிய பாங்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது.

  ‘கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்
  கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது’

        ‘பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர்’ என்ற தலைப்பில்,

  ‘குடும்ப விளக்கு இயற்றி வைத்து
  குடும்பங்களை ஒளிரவிட்டாய்’         என்றும்,

  தமிழண்ணல் குறித்து,

  ‘சதாசிவ நகரின் வாழ்ந்து முத்திரை பதித்தார்
  சதா தமிழைய நினைத்து போற்றினார்.

  உடல் குறைபாடு ஏற்பட்டு சக்கர நாற்காலியிலேயே ஆண்டுகள் சாதனை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங் வரலாற்றை எடுத்துரைத்தது இக்கால இளைஞருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

  ‘மருத்துவர் குறித்த வாழ்நாளோ இரண்டு ஆண்டுகள்
  மாமனிதர் வாழ்வு நீட்டித்ததோ ஐம்பத்தைந்து ஆண்டுகள்’

  ‘தமிழ் வாழ்க’ எனச் சொன்னால் போதுமா? என்ற தலைப்பில் பிறசொல கலந்து பேசினால் இனிமேல் பேசியவர்களிடம் தண்டத்தொகை வாங்கிட வேண்டும் என்றும்,

  நீட் தேர்வு குறித்து தனிமனிதன் பாதிக்கப்பட்டதும் தன்னம்பிக்கை வேண்டும் என்ற பாங்கில்,

  ‘அவசரப்பட்டு விட்டாய் அனிதா வேதனை
  அனிதாவோடு முற்றுப்பெறட்டும்  தற்கொலை’

உறவுகள் என்ற பிரிவில் தந்தை, தாய் சொல்கேட்டு நடந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற உயரிய கருத்து இடம்-பெற்றுள்ளது.

காதல் பற்றி

கண்கள் செய்யும் யுத்தகளத்தில் பெரும்பாலும்
கன்னியர் வெல்கின்றனர் ; காளையர் தோற்கின்றனர்…

அருமையாக உள்ளது.

  விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்
  விழிகளில் மின்சாரம் உள்ளது கண்டுபிடியுங்கள்.

கற்பனை வளம் செறிந்ததாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *