தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.

மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபையில் நடராஜரின் திருநடன நிகழ்ச்சி நடைபெறும்.
இந்தாண்டு திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

தினமும் சிறப்பு அலங்கா ரத்தில் பல்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 4-ம் நாளான 31-ந் தேதி சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பாக கடந்த 29-ந் தேதி முதல் இன்று வரை அதிகாலையில் திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று சுவாமி சந்திரசேகரர் பவனி, அம்பாள் செப்புத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்தனர்.

தொடர்ந்து 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்ட திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக நள்ளிரவு 12 மணி முதல் தாமிரசபை மண்டபத்தில் சுவாமி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கோபூஜையும், சிறப்பு அலங்கார நடன தீபாராதனையும் நடைபெற்றது.

அதன்பின்னர் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடராஜ பெருமான், காந்திமதி அம்பாளுக்கு திருதாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாயநம கோஷத்தோடு சுவாமியின் திருநடன காட்சியை கண்டு தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *