காதல் ஆத்திச்சூடி

காதல் ஆத்திச்சூடி

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 40

அவ்வையின் ஆத்திச்சூடி அறம் செய்ய விரும்பு !என்று தொடங்கும் கவிஞர் தபூ சங்கர் ஆத்திச்சூடி காதல் செய்ய விரும்பு ! என்று கற்பிப்பதுப் போல உள்ளது .தபூ சங்கர் காதலர் கட்சி தொடங்கி விரைவில் தலைவர் ஆகி விடுவாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது .இவருடைய படைப்புகள் அனித்தும் காதல் ! காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை என்று சொல்லுமளவிற்கு எங்கும் எதிலும் காதல் ரசமே பொங்கி வழிகின்றது .

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் காதலியின் இருப்பிடம் இதயம் அல்ல மூளை என்று இன்றைய அறிவியல் சொல்கின்றது .இனி வரும் கவிதைகளில் மூளை என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள் .இதயம் மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கும் காலம் இது .

உயிர் உள்ள இதயத்தில்தான்
காதல் நுழையும் என்றில்லை
காதல் நுழைந்ததால்
உயிர் பெற்ற
இதயங்களும் உண்டு .

காதல் கவிதைகளிலும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஒவ்வொரு நூலிலும் கண் தானம் பற்றிய கவிதை எழுதி வருவது நன்று .பாராட்டுக்கள் .

கண்களை
தானம் செய்யுங்கள்
அதற்கு முன்
காதலை தானம் செய்யுங்கள்
கண்களால் .

“பாவத்தின் சம்பளம் மரணம் ” கேள்விப்பட்டு இருக்கிறோம் .இப்படி அடிக்கடி கேள்விப்பட்ட சொற்களை வித்தியாசமாக மாற்றிப்போட்டு கவனம் கவர்ந்து விடுகிறார் .

புண்ணியத்தின்
சம்பளம்
காதல்

காதல் திருமணத்தில் முடிந்தால் நன்று .ஆனால் பலருக்கு திருமணத்தில் முடிவதில்லை .சிலருக்கு மட்டுமே காதல் திருமணத்தில் முடிகின்றது. காதல் திருமணம் முடித்தவர்களுக்கு ஆலோசனை வழுங்குகின்றார் .

காதலர்களாகச் சந்தித்துக் கொண்ட
இடங்களுக்கெல்லாம்
திருமணம் ஆனதும்
தம்பதிகளாகச் சென்று வாருங்கள்
அதற்குப் பெயர்தான் தேனிலவு .

திருமணம் ,காதல் இரண்டையும் மிக வித்தியாசமாக ஒப்பீடு செய்துள்ளார் .

திருமணம் என்பது
ஒரு நாழிகை செய்வது
காதல் என்பது
ஒவ்வொரு நாழிகையும்
செய்வது .

கவிஞர் தபூ சங்கர் காதல் ஆத்திச்சூடியை இப்படித் தலைப்பிட்டு அதற்கு விரிவான வசனம் காதலனுக்கு பயன்படும் விதமாக எழுதி உள்ளார். இந்த நூலை காதலைப் படிப்பவர்களுக்குப் பாடப் புத்தகமாக வைக்கலாம் .
அவளிடம் மயங்கு ,ஆயிரம் மறை கண்ணில் படு ,இதயத்தை அலங்கரி,ஈர்க்கும் படி நட ,உறுத்தாமல் பார் , ஊதிய மின்றி காவல் செய் ,எதற்கும் வழியாதே ,ஏகலைவனாய் இரு ,ஐம்புலன்களால் காதலி ,ஒய்யாரமாய்க் காதல் சொல்,ஓர் உலகம் செய் , ஒளவிபழகு .

காதல் ஆத்திச்சூடி தலைப்பில் உள்ள சில வைர வரி வசனங்கள் .

“எனக்கு வரையத் தெரியாதே என்று பதறாதே .உனக்கு வரையத் தெரியாதுதான் .ஆனால் உன் காதலுக்கு வரையத் தெரியும் .

முத்த முதலாய் உன் கண்கள் அவள் விழிகள் வலி பார்க்கிறபோதுதான் உன் காதல் வலி மொழியப்படுகிறது .

பார் அவளைப் பார்த்துக் கொண்டே இரு .

இந்த உலகத்தில் அழகான வேலை உன் காதலியை காவல் காக்கும் கருப்பண்ண சாமி வேலைதான் .

இப்படி காதலர்களுக்கு காதல் பற்றி வகுப்பு ஆசிரியர் போலப் பாடம் நடத்தி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் எப்போதும் காதலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்தால்தான் அவரால் இந்த அளவிற்கு காதல் பற்றி எழுத முடிகின்றது .இன்றைய கவிஞர்களில் இவர் அளவிற்கு யாரும் காதலை மட்டும் இந்த அளவிற்குப் பாட வில்லை என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .காதலை ஆய்வு செய்து கவிதை எழுதி வருகிறார் .இன்றைய இளைஞர்கள் அவ்வையின் ஆத்திச்சூடி மறந்தாலும் ,கவிஞர் தபூ சங்கர் காதல் ஆத்திச்சூடி மறக்க மாட்டார்கள் .இந்த உலகம் உள்ளவரை காதல் இருக்கும் .காதல் உள்ளவரை கவிஞர் தபூ சங்கர் கவிதை நிலைக்கும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *