தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தரமான மருத்துவ சேவையை பெற்றிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டு அவைகளின் கட்டிட வசதி, மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சி பகுதிகளில் 189 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சரால் நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117-க்குட்பட்ட விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரடியாக திறந்து வைக்கிறார். மீதமுள்ள 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலமாக மருத்துவர்கள் காணொலி வாயிலாக நோயாளிகளின் மேல் சிகிச்சைக்காக மற்றொரு முதுநிலை மருத்துவரின் ஆலோசனையை பெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் அனைத்து நலவாழ்வு மையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நலவாழ்வு மையங்களில், மாவட்ட சுகாதார சங்கங்களின் வாயிலாக, மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், துணை பணியாளர் என தலா ஒருவர் ஒவ்வொரு மையத்திலும் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மையங்கள், காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படுவதோடு, அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *