ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து திமுக தலைமை அறிவிப்பின்படி தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர்களும் அமைச்சர்களுமான பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆர்-க்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கத்துடன் தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித்திட்டத்தோடு ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, முறையான திட்டம் இன்றி அவசரகதியில் எஸ்ஐஆர்-ஐ கொண்டு வந்து தேர்தல் ஆணையம் இதைச் செய்திட முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மக்களாகவும் – விவசாயிகளாகவும் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வழங்கும் கணக்கீட்டுப் படிவங்களை பெற்று, திருப்பி அளிக்க போதிய கால அவகாசம் கிடைக்காது. மேலும் அந்தப் கணக்கீட்டுப் படிவங்களில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை எப்படி நிரப்புவது என்பது குறித்து மக்களிடையே பெரும் குழப்பங்கள் நிலவுகிறது.
இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் தகுதியுள்ள வாக்காளர்கள். நீக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்தக்காலம் கணக்கீட்டுக்கு உகந்த காலம் இல்லை என்று திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்திருந்தன.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்தவாறே கடந்த 4 ஆம் தேதியில் இருந்து எஸ்ஐஆர் பெரும்பாலான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. பொரும்பாலான இடங்களில் பிஎல்ஓ-க்கள் கணக்கீட்டுப் படிவங்களை வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. பிஎல்ஓ-க்களும், பிஎல்ஏ-க்களும் பல இடங்களில் இன்னும் சரியான தகவல் தொடர்புகளால் ஒருங்கிணைக்கப்படவில்லை.
மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002ஃ2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன.
எனவே எஸ்ஐஆர் சீராய்வைக் கைவிடும்படி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தும், கண்டுகொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி அவசரகதியில் எதேச்சாதிகாரப் போக்கில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து தூத்துக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி தூத்துக்குடி மாநகரில் – சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் (விவிடி சிக்னல்) அருகே மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக, திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், தமிழ்புலிகள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.