புதுச்சேரியில் கால்பதிக்க மத்திய பாஜக அரசு எந்த மாதிரியான சூழ்ச்சியை செய்தாலும் அதனை திமுக முறியடித்து திராவிடம் வெல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசி உள்ளார்.
சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பாக தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தட்டாஞ்சாவடியில் நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்தீஷ் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், தொகுதி அவைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக இந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெறுகிறது. இதில் நமக்கு எதிராக பல சதி திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் வாக்காளர் திருத்தப் பணியில் எந்த தவறும் நடக்க விடாமல் திமுக பாக முகவர்கள் விழிப்புடன் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஒரு வாக்குதான் என அலட்சியம் செய்யாமல் ஒவ்வொரு வாக்கும் அவசியம் என்பதை உணர்ந்து அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும். என்.ஆர். காங்கிரஸ் கோட்டையாக இருந்த தட்டாஞ்சாவடி தொகுதியை உடைத்தெறிந்தவர்கள் திமுக–வினர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்தீஷை களமிறக்கிய பிறகு தட்டாஞ்சாவடி தொகுதி மிகுந்த எழுச்சி பெற்றுள்ளது.
இதனை பயன்படுத்தி கழகத்தினர் ஒற்றுமையாக செயலாற்றி வாக்காளர் திருத்தப் பணியை முழுமையாக செய்ய வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கால்பதிக்க மத்திய பாஜக நினைக்கிறது. அந்த சூழ்ச்சிகளை எல்லாம் திமுக முடியடித்து திராவிடம் வெல்லும் என்பதை நிரூபிக்கும். இவ்வாறு பேசினார்.
இதில், இளங்கோ, தொகுதி துணைச் செயலாளர்கள் குடியரசு, சுகுணா, திருலோகச்சந்தர், மாநில பிரதிநிதி ராஜசேகர், சங்கர், சுரேஷ், குலந்தைதாசன், பிச்சாண்டி, பாலு, கோகுல் பிரகாஷ், கார்த்திகேயன், சிவதாசன், முத்து, வேலு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.