தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணிக்கு முன்னாள் பொருளாளர் மோகன், ஜான்சண் மற்றும் திருமண்டல மீட்பு இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்று வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்போம் என எஸ்.டி.கே.ராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் திருமண்டல பெருமண்டல உறுப்பினர்கள், சேகரமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருமண்டலத்தில் மொத்தம் 131 சேகரங்கள், 6 சபை மன்றங்கள் உள்ளது. இதில், 44 சேகரங்களில் 76 திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 87 சேகரங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 186 திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் 140 குருவானவர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன், தலைமையிலான அணியினருக்கும், டி.எஸ்.எப். அணியினருக்கும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் இருஅணிகளையும் சாராமல் சிலர் திருமண்டல மீட்பு இயக்கம் தொடங்கி 3வது அணியாக போட்டியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் 3வது அணியாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட திருமண்டல மீட்பு இயக்கத்தை சேர்ந்த ஜான்சண் டேவிட், எபநேசர் மங்களராஜ், ஸ்டாலின் மற்றும் முன்னாள் பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் உள்ளிட்டோர் நேற்று எஸ்.டி.கே.ராஜனை சந்தித்து முழு ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த முறை டி.எஸ்.எப். அணிக்கு ஆதரவு தெரிவித்த மோகன்ராஜ் அருமைநாயகம், ஜான்சண் டேவிட், எபநேசர் மங்களராஜ் ஆகியோர் தற்போது எஸ்.டி.கே.ராஜனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திருமண்டல தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் கூறுகையில்: தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு-உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 131 சேகரத்தின்கீழ் 600 தேவாலயங்கள் உள்ளன. இவற்றில் நடந்த தேர்தலில் எங்கள் அணி சார்பில் 190 பேர் திருமண்டல பெருமண்டல உறுப்பினர்களாக (டிசி மெம்பர்) வெற்றி பெற்றுள்ளனர். கடந்த நிர்வாகத்தில் திருமண்டல அலுவலகம் கட்டுவது, ஆசிரியர்கள், குருவானவர்கள் நியமனம் என அனைத்திலும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளது.
திருமண்டல அலுவலகம் முழுமையாக கட்டப்படாத நிலையில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. நாங்கள் பொறுப்பிற்கு வந்தவுடன் இந்த நிதி முறைகேடுகள் பணத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுப்போம். ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை திருச்சபை மக்களுக்கு வழங்குவோம். திருமண்டலத்தில் தேர்தலில் தோற்றுவிடுவோம் என கருதும் சிலர் தேர்தலை நிறுத்த பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனைதாண்டி நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றார்.
முன்னாள் பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், செயற்குழு உறுப்பினர் ஜான்சண் டேவிட், முன்னாள் கால்டுவெல் கல்லூரி தாளாளர் எபநேசர் மங்களராஜ் ஆகியோர் கூறுகையில்: நாங்கள் கடந்த முறை டி.எஸ்.எப். அணியில் இணைந்து பணியாற்றினோம். ஆறே மாதத்தில் அவர்கள் தவறுகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் நாங்கள் அவர்களை எதிர்த்து குரல் கொடுத்தோம். எங்களை பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களை பொருளாளர் உள்ளிட்ட பதவிகளில் நியமித்து பல முறைகேடுகளை செய்தனர். குறிப்பாக திருமண்டல அலுவலகம் கட்டுவதாக கூறி பலகோடியை மோசடி செய்துள்ளனர்.
இதற்காகவே தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு, திருநெல்வேலியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து மோசடி செய்தனர். திருமண்டலத்தில் நல்ல நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்தமுறை நாங்கள் எஸ்.டி.கே.ராஜனுக்கு முழு ஆதரவை அளித்துள்ளோம். 80 சதவீதம் பெருமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. எனவே, திருமண்டல நிர்வாகிகள் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். நல்ல நிர்வாகத்தை வழங்குவோம் என்றனர்.
இதில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா.ஹென்றி, தொழிலதிபர் ஞானராஜா, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெபர்சன் சாமுவேல்ராஜ், ஞான்ராஜ், குணசீலன் தங்கதுரை, மாமல்லன், அருண்ஜெபக்குமார், பிரகாஷ், தனசிங், தனசேகர், ஜானியேல் சாலமோன் மணிராஜ், ரவிராஜன், அலெக்ஸ், கிறிஸ்டோபர், கருணாநிதி, ஆலயமணி, ஜெயக்குமார் சந்தோஷ், ஜேம்ஸ், ஜெபதுரை, ஜான்சிங், உதங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.