தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியால் சாலையோரத்தில் பிரசவம்; தாயும் சேயும் நலம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மனக்கடவு அருகில் உள்ள சூர்யா கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வசித்து வருபவர் ராகேஷ் (40). அவரது மனைவி சுசிலா (35) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் இன்று (18.11.2025) அதிகாலை வீட்டில் இருந்தபோது திடீரென கடும் பிரசவ வலி உண்டாக, குடும்பத்தினர் அவசர உதவி கோரி 108 கால் சென்டருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடமான சூர்யா கோழிப்பண்ணைக்கு சென்று சேர்ந்தது.
அங்கு பிரசவ வேதனையில் தவித்த சுசிலாவை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதுகாப்பாக ஏற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தாராபுரம் பழனி பைபாஸ் சாலை அருகே வந்தபோது திடீரென சுசிலாவின் பணிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வரத் தொடங்கியது. நிலைமை அவசரமடைந்ததால், ஆம்புலன்ஸிலேயே அவசர பிரசவம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மருத்துவ அவசர நிபுணர் ஏ.இளவரசு மற்றும் பைலட் எஸ்.கவுதம் ஆகியோர் உடனடியாக செயல்பட்டு, வழியிலேயே பாதுகாப்பாக பிரசவத்தை மேற்கொண்டனர். ராகேஷ்–சுசிலா தம்பதியருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்பெற்றனர்.
இதையடுத்து தாராபுரம் பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ் குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, புதிதாகப் பிறந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய்–சேய் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் “தாயும் சேயும் நலம்” என உறுதிப்படுத்தினர்.
சாலையோர அவசரநிலையில் செயல்பட்டு பாதுகாப்பான பிரசவத்தை நடத்தித் தந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களான ஏ.இளவரசு மற்றும் எஸ்.எஸ்.கவுதம் க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.