இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரகோட்டைஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்துள்ளதால் சரணாலயங்களுக்கு பறவைகள் வந்துள்ளன.
தற்போது நெல் சாகுபடி பணி காரணமாக வயல் வெளிகள், ஓடைகளில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் குவிகின்றன. இவற்றை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அலைபேசியில் படம் எடுத்து மகிழ் கின்றனர். இந்த பறவைகளை சட்ட விரோதமாக வேட்டையாடும் சமூக விரோதிகளிடம் இருந்து அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும்.