செய்தியாளர் சீனிவாசன்.
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு. செவ்வாய்க்கிழமைகளில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை. வாகன நிறுத்துமிடம், மாற்றுவழிப்பாதை உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என பேட்டி.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வது வாடிக்கை. இந்த நிலையில் சிறுவாபுரி முருகன் கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
செவ்வாய்க்கிழமைகளில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது, பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்வதற்கான வரிசை முறை ஒழுங்குபடுத்தல், பக்தர்கள் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல சாலை விரிவாக்கம், மாற்றுப்வழிப்பாதை, வாகன நிறுத்துமிடம், உள்ளிட்டவை குறித்து காவல்துறை எஸ்பி விவேகானந்த சுக்லா, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ரவிச்சந்திரன், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு அடிப்படை வசதிகள் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாற்றுபாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் மாதத்தில் இந்த பணிகள் முடிந்து, ஜனவரி மாதத்தில் மாற்றுவழிப்பதை தொடங்கி அடுத்த 6 மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா, வாகன நிறுத்துமிட வசதியை மேம்படுத்துவது, வரிசை முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். செவ்வாய்க்கிழமைகளில் காலை நேரத்தில் 75காவலர்கள், கோவில் நிர்வாகம் சார்பில் 40 தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதில் திருவள்ளூர் ஆணையர் அனிதா, உதவி ஆணையர் சிவஞானம், கோயில் அலுவலர் மாதவன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி ராஜன், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர் .