தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –
300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டைமண்ட் கிரஷர் நிறுவனத்தை மேலும் விரிவாக்கி புதிய கிளை கல்குவாரி அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்த திட்டம் கிராம மக்களின் வாழ்வாதாரம், நீர் வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதைத் தடுத்து நிறுத்த கோரி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
“வீடுகளில் விரிசல்… உடல்நலப் பிரச்சினைகள்” – பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஏற்கனவே இயங்கி வரும் கிரஷர் நடவடிக்கைகளால் ஏற்படும் அதிர்வு, வெடிப்பு, தூசி, புகை ஆகியவற்றால் வீடுகளில் விரிசல்கள் உருவாகியுள்ளன. மேலும், பலர் உடல்நலக் குறைபாடுகளால் மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென பொதுமக்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் இரண்டு முக்கியமான குளங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இவை நிரம்புவதாலேயே குடிநீர் ஆதாரம் பாதுகாப்பாக உள்ளது. புதிய கல்குவாரி திட்டம் செயல்பட்டால் இந்த நீர்நிலைகள் ஆபத்தில் சிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
“வனவிலங்குகள் வாழும் பகுதி பாதிக்கப்படும்”
பச்சாபாளையம் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று இருப்பதையும், அங்கு பல்வேறு வனவிலங்குகள் வாழ்வதையும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர். கல் வெட்டும் பணிகள் அந்த உயிரியல் சூழல் முழுவதையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தற்போதைய கிரஷர் செயல்பாடுகளை மீண்டும் பரிசீலித்து, அதன் விதிமீறல்களை வெளிப்படையாக மக்களிடம் விளக்குதல்
அருகிலுள்ள தார் பிளாண்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலனை பொருட்படுத்தி சிறப்பு ஆய்வு மற்றும் ஆலோசனை குழுவை அமைத்தல் வேண்டும்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் “எங்கள் வீடுகள், நீர் வளம், விவசாயம், கால்நடை—எல்லாம் ஆபத்தில் உள்ளன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும்” என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க வேண்டிய நிலை உருவாகும் என்று அவர்கள் கோட்டாட்சியர் ஃபிலிக்ஸ் ராஜாவிடம் எச்சரித்துள்ளனர்.