கோட்டூர்., செப். 28.-

மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குருவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா பயிர்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் திறக்கக்கோரி கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படாததால் குருவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிப்புகளை சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சம்பா சாகுபடி செய்யலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்தும், கடன் பெற்றும் நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

விதைப்பு செய்து 10 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், சில பகுதிகளில் பயிர்கள் முளைத்துள்ளன. ஆனால் பல பகுதிகளில் நெல் முளைக்காமலும், முளைத்த பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும் உள்ளது.

இதனால் வயல்களில் முளைத்துள்ள சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், விதைக்கப்பட்ட நெல்மணிகளும் தண்ணீர் இல்லாமல் மடிந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி, கோட்டூர் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கே. எம். அறிவுடையநம்பி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சௌந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம். செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் பி. பரந்தாமன், எம். சிவா சண்முகம், ஒன்றிய பொருளாளர் எம். ஆர். முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சாலை மறியல் காரணமாக மன்னார்குடி–திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *