முத்துப்பேட்டையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மன்னார்குடி., செப்.28-
மன்னார்குடி நகராட்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாமணி ஆற்றில் கலப்பதை உடனடியாகத் தடுத்து, பாமணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ஆம் தேதி முத்துப்பேட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மன்னார்குடி அருகேயுள்ள சேரங்குளம் பகுதியில் சட்ரஸ் மதகில் தேங்கியிருந்த கழிவுநீரை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…
மன்னார்குடி நகராட்சியின் கழிவுநீர் பாமணி ஆற்றில் கலக்கப்படுகிறது. நீடாமங்கலம் பகுதியில் பிரியும் பாமணி ஆறு தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதிகள் வழியாக சுமார் 60 கி.மீ. பயணித்து கடலில் கலக்கிறது.
பாமணி ஆற்றைச் சார்ந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பல்வேறு கிராம மக்கள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். முத்துப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இவ்வாறு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில் நகராட்சிக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களின் சுகாதாரத்துக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்துவதுடன், பாமணி ஆற்றின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், நீர்ப்பாசனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைக் கண்டித்து அக்டோபர் 2-ஆம் தேதி முத்துப்பேட்டை–பட்டுக்கோட்டை சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். அன்றைய தினம் முத்துப்பேட்டையில் கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மன்னார்குடி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் டி.மனோகரன், எம்.தெய்வமணி, முத்துப்பேட்டை ஜெயபிரகாஷ், சேகர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.