சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வில் முதல் முயற்சியிலேயே சென்னை மாணவி அகில இந்திய அளவில் 107-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், தமிழகத்தில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை திரு.வி.க.நகரை சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 107-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஜீஜீ தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை சுரேஷ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். தாயார் சபிதா குடும்ப தலைவியாக உள்ளார். அண்ணன் மனோஜ் இந்திய தொழில் கூட்டமைப்பில் (சி.ஐ.ஐ.) பணியாற்றி வருகிறார். அண்ணி நிவேதா குடும்ப தலைவியாக உள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து, ஜீஜீ அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லும்போதில் இருந்தே செய்தித்தாள்களை மிகவும் ஆர்வமாக தினந்தோறும் படிப்பேன். நான் எழுதிய கதை, கட்டுரை, கவிதைகள் இதழ்களில் பிரசுரமாகியிருக்கிறது. முதலில் பத்திரிகையாளர் ஆகி சமூகத்துக்கு நம்மால் முயன்ற நல்ல காரியங்களை செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று பேராசிரியர் எனக்கு ஊக்கம் கொடுத்தார். அதன்பின்பு, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு குறித்து அறிந்துகொண்டு, அதற்காக தயாராகினேன். சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக மெனக்கிட்டு, அதிக நேரங்களை ஒதுக்கியெல்லாம் படிக்கவில்லை. செல்போன்களையும் பயன்படுத்தாமல் ஒதுக்கியெல்லாம் வைக்கவில்லை. வெளியுறவு பணி எப்போதும் படிப்பது போன்று புரிந்து படித்தாலே போதும் சாதித்துவிடலாம். நானும் நன்கு புரிந்துகொண்டே படித்தேன். அதனால்தான் என்னால் முதல் முயற்சியிலேயே சாதிக்க முடிந்தது. சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்திருக்கிறேன். தமிழ் இலக்கியம் எடுத்து படித்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நான் படித்த அகாடமியில் நல்ல முறையில் ஆதரவு தந்து, ஊக்குவித்தார்கள், கற்றுக்கொடுத்தார்கள். எனக்கு குடும்பத்தில் அப்பாவின் ஆதரவு அதிகமாக இருந்தது. அப்பா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். அதேபோல குடும்பத்தினர் அனைவரும் ஊக்கம் தந்தார்கள். இதனாலேயே என்னால் வெற்றி பெற முடிந்தது. நான் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *