இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 11க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியதால் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பனை வனத்துறையினர் பிடித்து குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக் கொம்பன் மாவடி, வட்ட தொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளிரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ்.சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது. நேற்று காலை கம்பம் நகருக்குள் வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரிய வரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் ஆக்ரோசத்துடன் சென்றது. யானை தாக்கி பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார். உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைபாசில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சுருளிப்பட்டி சாலையில் சென்றது. அங்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்தில் முகாமிட்டு பின்னர் சுருளி அருவி பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கண்காணித்த போது அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது. அரிசி கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்திட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொரு கும்கி யானையும் வர உள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர். பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர். இருந்தபோதும் சுருளி அருவி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *