அண்ணாவின் மொழி ஆளுமை!
நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. ரேணுகாதேவி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இலக்கிய பதிப்பகம், வெளியிட்டோர் தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 48, வட்டச் சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.

பக்கங்கள் : 123, விலை : ரூ.120***நூலாசிரியர் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி அவர்கள் மொழியியல் துறையில் பேராசிரியராகவும், தலைவராகவும் 35 ஆண்டுகள் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தில் பணியாற்றியவர். உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்த முனைவர் க. பசும்பொன் அவர்களின் மனைவி முகநூலிலும் இயங்கி வருபவர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி, ஓர் இரவு என்னும் இரு நாடகங்களும் ஒரு சில சிறுகதைகளையும் கொண்டு ஆய்வுசெய்து ஆய்வேடாக வழங்கி உள்ளார்கள்.

அண்ணாவின் மொழி ஆற்றலை கோபுரத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள். பாரட்டுக்கள். கடின உழைப்பு, நல்ல ஆய்வு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அழியாப் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அண்ணாவின் அளப்பரிய ஆற்றலுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

6 கட்டுரைகளாக வழங்கி உள்ளார். முன்னுரை, அண்ணா ஓர் அறிமுகம், அண்ணாவின் படைப்புகள், அண்ணாவின் மொழிநடை, அண்ணாவின் ஆளுமைத் தொடர்கள், நிறைவுரை. இறுதியாக ஆய்வுக்கு துணைநின்ற நூல்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து இந்நூலை உருவாக்கி உள்ளார்கள்.குள்ள உருவம், குறும்புப் பார்வை, விரிந்த நெற்றி, பரந்த மார்பு, கறை படிந்த பற்கள், கவலையில்லாத் தோற்றம், நறுக்கப்பட்ட மீசை, நகை தவழும் முகம், சீவாத தலை, சிறிதளவு வெளிவந்த தொப்பை, செருப்பில்லாத கால், பொருத்தமில்லாத உடைகள், இடுப்பில் பொடிமட்டை, கையில் வெற்றிலை பாக்குப் பொட்டலம் – இப்படி பேரறிஞர் அண்ணா அவர்களை நம் கண்முன் காட்சிப்படுத்திய வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன்.

நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையினர் அண்ணாவை பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வர்ணனையை வைத்தே அவரை உருவகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் பேச்சிலும், எழுத்திலும் எதுகை, மோனை சிறந்து விளங்கும். அவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார்கள்.பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும் நூலில் உள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளோடு ஒப்பிட்டு அவரின் ஆளுமையை விளக்கிய விதம் அருமை. அண்ணாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாள், மாதம், வருடம் என தெளிவான புள்ளி் விவரங்களுடன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்தரும் விதமாக தகவல் களஞ்சியமாக இந்த நூல் உருவாகி உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் வீ. ரேணுகாதேவி அவர்களுக்கு பாராட்டுகள். வாழ்க்கை நிகழ்வு நிரம்ப உள்ளன. பதக்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.11.2.1934 முதல் சிறுகதை ‘கொக்கரக்கோ’ ஆனந்த விகடனில் வெளிவந்தது.11.4.1937 நீதிக்கட்சியின் செயற்குழு உறுப்பினராதல்.10.2.1939 சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்.2.4.1957 தமிழ்நாடு சட்டமன்ற தி.மு.க. தலைமை ஏற்று எதிர்கட்சி தலைவராகுதல்.1.3.1967 அண்ணா முதல்வர் பொறுப்பேற்றல்.14.4.1987 ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமை தரல்.அண்ணா பற்றிய நூல்களில் ஆகச்சிறந்த நூலாக, ஆவணமாக உள்ளது.இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. படித்துவிட்டு வியந்து போனேன்.

அறிஞர் அண்ணாவின் ஆற்றல், உழைப்பு, பேச்சு, எழுத்து அளப்பரியது. காலத்தால் அழியாத பல சாதனைகளை நிகழ்த்திய செயல்வீரர், பேச்சு, எழுத்து இரண்டிலும் தனிமுத்திரை பதித்த பண்பாளர் என்பதை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் 61 படைப்புகளையும், ஆண்டு, புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உள்ளார்கள். சிறுகதைகள் 108 வரிசைப்படுத்தி உள்ளார் தேதி வாரியாக. நாவல்கள் 5, குறு நாவல்கள் 23, கட்டுரைகள் 84, கதைப் பாடல்கள் என அனைத்தையும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உள்ளார்.

அறிஞர் அண்ணா பற்றி முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல் இது.பேரறிஞர் அண்ணாவின் உரைநடையை தொல்காப்பியரின் விளக்கத்துடன் ஒப்பிட்டு விளக்கி உள்ளார்கள்.

சிறப்பு.இயைபு விளையாடும் மொழிநடை எடுத்துக்காட்டு மிகச் சிறப்பு,எதிர்க்கத் தெரியாத கோழை,இங்கிதம் தெரியாத வாழை
இவள் பெயர் ஏழை. (செவ்வாழை பக். 42)புதுச் சொல்லாட்சியை உரைநடையில் படைப்புகளில் பயன்படுத்தி உள்ளார்.

வறண்ட மதியினர், காவியுடைக்காரர், கமண்டல மேந்திகள், கிழக்குரங்கு, பணம்பிடுங்கி, காமக்குரங்கு – இப்படி பல புதிய சொற்களைப் பயன்படுத்தி தமிழுக்கு உரம் சேர்த்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.இலக்கண நயம் மிக்க சொற்களை தனது படைப்புகளிலும், பேச்சுக்களிலும் மிக மிகவும் இயல்பாக, எளியவர்களுக்கும் எளிதாக புரியும் விதமாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் பேரறிஞர் அண்ணா என்பது நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்கள்.

பேரறிஞர் அண்ணாவின் ஆளுமைத் தொடர்கள், காலத்தால் அழியாதவை, பல மேடைகளில் இன்னும் ஒலிப்பவை. அவற்றில் சில இதோ.விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு. பொதுவாழ்வு புனிதமானது, உண்மையாக விளங்கும் உயர்பண்பு தான் அதற்கு அடித்தளமானது. ஊருக்கு உபதேசம் என்று இல்லாமல், எழுதியபடி, பேசியபடி உண்மையாக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அதனால் தான் இன்றும் மனங்களில் வாழ்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *