ஆடிட்டர் ஆகுவதே தனது லட்சியம் என முதலிடம் பெற்ற மாணவி மகாலட்சுமி பேட்டி…

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் திருப்பூர் மாவட்டத்தில்  23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் சதவீதம் 97.45 ஆகும். தமிழகத்தில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடப்பாளையத்தில் உள்ள யுனைவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சேடப்பாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற மாணவி 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த இளையராஜா மற்றும் மது ஆகிய தம்பதியினர் 20 வருடங்களுக்கு முன்பு சேடப்பாளையத்திற்கு குடி பெயர்ந்த பிறகு இளையராஜா மற்றும் மது புகைப்படக் கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பில் இளையராஜா உயிரிழந்த நிலையில் மது தனது மகள் மகாலட்சுமி மற்றும் தனது மகனை புகைப்பட கலைஞராக பணியாற்றி படிக்க வைத்துள்ளார்.

மகாலட்சுமி சேடபாளையத்தில் உள்ள யுனைவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வணிக கணக்குவியல் பாடப்பிரிவில் பயின்று வந்த நிலையில் 600 மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், economics,commerce,accountancy, மற்றும் வணிக கணக்குவியல் பாடம் என மொத்தம் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி மகாலட்சுமிக்கு பள்ளி தாளாளர் சாவித்ரி ராஜகோபால்,செயலாளர் வினோதரணி ராஜகோபால்,முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் மாணவி மகாலட்சுமியுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முறையான திட்டமிடலோடு படித்ததால் தான் இவ்வளவு மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும், ஆடிட்டர் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருவதாகவும் வருங்காலத்தில் auditor (தணிக்கையாளர்)  ஆவதே தனது லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.

புகைப்பட கலைஞரின் மகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது…

: மகாலட்சுமி ( 598 மதிப்பெண் பெற்ற மாணவி)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *