ஊத்தங்கரை
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வெங்கடேசன்,54, இவருக்கு லக்ஷ்மி,48, என்கிற மனைவியும், சந்தோஷ்,20, சந்திரகுமார்,16, ஆகிய மகன்களும் உள்ளனர். சந்தோஷ் பி.டெக் படித்து வருகிறார். சந்திரகுமார் பிளஸ் டூ முடித்துள்ளார். வெங்கடேசன் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் பல லட்சம் பணம் பெற்றுள்ளார்.

இந் நிலையில் இவரின் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, சுன்னாலம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் அரசு வேலைக்காக பலரிடமும் பணம் பெற்று 12 கோடி ரூபாய் வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக் கொண்ட வெங்கடேசன், பணி நியமன ஆணைகளை கணேசனிடம் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் வேலையில் சேரும்போது அது போலியான ஆணை என்பது தெரிய வந்தது. இது குறித்து பணம் கொடுத்தவர்கள் கணேசனிடம் கூறினர். வெங்கடேசனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, ஆசிரியர் கணேசன் பலமுறை அலைந்துள்ளார்.

வெங்கடேசன் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்இந்த நிலையில் வெங்கடேசன்,அவரது மனைவி லட்சுமி ஆகியோர் தன்னுடைய இளைய மகனை நீட் தேர்விற்காக தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக சென்னையில் விட்டு விட்டு, நிலம் கிரயம் தொடர்பாக சேலம் செல்வதாக கூறியுள்ளனர்.

அவருடைய மகன்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது, வெங்கடேசன் செல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. வெங்கடேசன் லட்சுமி ஆகியோர் வீடு திரும்பாததால் அவருடைய மகன் தங்களுடைய தந்தை காணவில்லை என்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 7 ல், புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் படி குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல் மற்றும் தனிப்படை போலீசார் இதில் சம்மந்தப்பட்ட ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் கணேசன்,47, பொள்ளாச்சி ஆணைமலை கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம்,32, ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ்,33, ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கீழ் குப்பத்தில் உள்ள ஜல்லி கிரஷரில் வைத்து அடித்ததில், வெங்கடேசன் இறந்து விட்டதாகவும், இறந்த வெங்கடேசன் உடலை கிரசருக்கு அருகிலேயே புதைத்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசார், ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கிரஷரில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

நேற்று காலை குன்றத்தூர் போலீசார் கீழ் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஜல்லி கிரஷருக்கு ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட மூவரை அழைத்து வந்தனர். சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் கந்தவேல், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், வருவாய் ஆய்வாளர் கெஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், ஆசிரியர் கணேசன் இறந்த வெங்கடேசனை புதைத்த இடத்தை காட்டினார்.

அதிகாரிகள் அந்த இடத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் மீட்டனர். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரவீனா, சதீஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் வெங்கடேசன் உடலை அவருடைய மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *