நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இவைகள் அவ்வப்போது இரைகள் தேடியும், தண்ணீர் தேடியும் மக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு ,கோழி, நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களை வேட்டையாடி செல்கின்றன.
வனத்துறையினர் அவ்வப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்த பொழுதிலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது குறிப்பாக விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் புகுந்து கோவிலில் பூஜைக்கு பயன்படுத்தும் எண்ணெய்களைப் குடித்து வருகின்றன.
இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட சங்கரபாண்டியபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் இரண்டு கரடிகள் ஜோடியாக உலா வந்தது.
இதை பார்த்த அப்பகுதியினர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த காட்சிகள் தற்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விடுவிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.