தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *