திருவாரூர்,தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி அதனை கண்டித்து திருவாரூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது இரா.காமராஜ் எம்எல்ஏ செய்தியாளரிடம் கூறியதாவது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு பொது வழக்கு போட்டுள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாகும். எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நெரிக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்திலிருந்து அங்குள்ள பேருந்தில் எளிமையான முறையில் பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை, பிறரது தூண்டுதலோடு பயணம் செய்த நபர் ஒருவர் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புகிறார். கோஷம் போடுகிறார்.

இந்த நேரத்தில் கூட ஒரு வார்த்தை கூட பேசாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் நாகரிகமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது. சிவகங்கையில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த அதிமுக கூட்டத்தை பார்த்துவிட்டு மனம் பொறுக்காமல் இந்த வழக்குகளை போட்டுள்ளனர்.

உடனடியாக இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பொய் வழக்கு போட்டது தவறு என்று கூறி பொதுமக்களிடமும், எடப்பாடி பழனிச்சாமியிடமும் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது. நெல் மூட்டைகள் மட்டுமல்ல அரசின் அனைத்து திட்டமும் தேங்கி கிடக்கிறது. பொய் வழக்கு போடுதல், பழி வாங்குதல் இவைகளில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவராஜாமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *