ஈரோட்டில் மாணவர்கள் உலக சாதனை அசத்தல்… 100% வாக்குப்பதிவுக்காக வரலாறு படைத்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்..!
ஈரோடு மாவட்டத்தில் மக்களாட்சியும் மாணவர் திறமையும் ஒன்றிணைந்த உலகச் சாதனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ச. கந்தசாமி, தலைமையில், முன்னணி CBSE கல்வி நிறுவனமான ஈரோடு சிட்டி சென்ட்ரல் பள்ளியில் இந்த மாபெரும் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்கள் முன்னெடுத்த இந்த உலகச் சாதனை முயற்சி, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“உங்கள் வாக்கு! உங்கள் உரிமை! உங்கள் கடமை!” என்ற விழிப்புணர்வு கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்ற இந்த நிகழ்வில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, குடிமைப் பொறுப்புணர்வை வலியுறுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் விழிப்புணர்வு சூழல் நிலவியது.
இமயம் டிரஸ்ட், அல்-அமீன் கல்வி நிறுவனங்கள், வாசவி கல்லூரி, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தா மகளிர் கல்லூரி, ஜூனியர் ரெட் கிராஸ் உள்ளிட்ட பல கல்வி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, இரண்டு உலகச் சாதனைகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன முதலாவது சாதனையாக, 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கைவிரல் அச்சுக்களை பயன்படுத்தி, 18 மீட்டர் உயரமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட (270 சதுர மீட்டர்) தமிழ்நாடு வரைபட ஓவியம் உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய கைவிரல் அச்சு ஓவியமாக பதிவாகியுள்ளது.
இரண்டாவது சாதனையாக, 60,000-க்கும் மேற்பட்ட ஒரிகாமி இதயங்களை கொண்டு, 21 மீட்டர் உயரமும் 17.5 மீட்டர் அகலமும் (367.5 சதுர மீட்டர்) கொண்ட தமிழ்நாடு வரைபடம் வடிவமைக்கப்பட்டது. இந்த படைப்பும் உலகச் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இடத்தில் வாக்காளர் உறுதிமொழி வாசித்தார்.
பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியின் தாளாளர் டாக்டர் கே.எம். அபுல் ஹசன், தலைவர் ச. ஆஷிக் முகம்மது, பொருளாளர் ஹசீனத்துல் ஷஃபீக்கா, பள்ளியின் முதல்வர் தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் குழு நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இந்த உலகச் சாதனை முயற்சியை Elite World Records, Asian Book of Records, Indian Book of Records, Tamilan Book of Records ஆகிய அமைப்புகள் கண்காணித்து சான்றளித்தன. சான்றிதழ்கள் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உற்சாக பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது, கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை இணைக்கும் இந்த உலகச் சாதனை முயற்சி, ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது.