C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்
தகவல்….
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பெயரிலான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் 19.11.2025 புதன் அன்று காலை 09.00 மணிக்கு விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமத்துவ வளர்ச்சி, சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையில் தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்தி வளமிக்க சமூகத்தை கட்டமைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்நிகழ்ச்சி தமிழ்ப் பெருமிதங்களைப் பறைசாற்றும் வகையிலும், தங்கள் புலமை சார்ந்தும் ஆளுமைகள் பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்கு தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமையும்.
இந்நிகழ்வு நடைபெறும் கல்லூரியில் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக் காட்சி, “நான் முதல்வன்”, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு “உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி”, “தமிழ்ப்பெருமிதம்” ஆகிய இரு சிற்றேடுகள் வழங்கப்படுகின்றன. “தமிழ்ப்பெருமிதம்” சிற்றேட்டிலுள்ள குறிப்புக்களை வாசித்து சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் “பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன்”எனப் பாராட்டியும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களைக் “கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன்”எனப் பாராட்டியும் சான்றிதழ்களும் பரிசுப் புத்தகங்களும் வழங்கப்படும்.
மேற்படி நிகழ்ச்சிகளில் கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.