திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 25. துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் புதியதாக கார் வாங்கி ட்ராவல்ஸ் நடத்த உள்ளதாக தமது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
மேலும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சித், மீஞ்சூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தமது நண்பர் ஒருவருடன் வெளியே சென்ற ரஞ்சித், இரவு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.
செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு ரஞ்சித், கிடைக்காத நிலையில் இன்று காலை மீண்டும் தேடி உள்ளனர். அப்போது தோட்டக்காடு ஊர் எல்லையில் தனியார் நிலத்தில் முட்புதரில் உள்ள தண்ணீரில் ரஞ்சித் தலை, கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் ரஞ்சித், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரஞ்சித், பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அந்த முன் விரோதத்தில் அவரது உறவினர்கள் கொலையை அரங்கேற்றினார்களா அல்லது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா, வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சந்தேகத்திற்கிடமான் வகையில் உள்ள இளைஞர்கள் சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தங்களது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருவதாகவும், திருமணத்திற்காக யாரையாவது காதலிக்கிறாயா எனக் கேட்டபோது யாரையும் காதலிக்கவில்லை என ரஞ்சித் கூறியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் தோட்டக்காடு கிராமத்தில் ஏற்கனவே ஒரு கொலை நடந்திருந்த நிலையில் கஞ்சா போதையில் குற்ற செயல்கள் நடப்பதாகவும் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.