எண்ணுார் அடுத்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, எட்டாவது பிளாக், 46 வீட்டில் வசிப்பவர் விஜய், வயது .29, மீனவர். இவருடைய மனைவி பிரபாவதி, வயது.26, தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு நவீன், வயது.3, என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம், பிரபாவதி குழந்தையுடன் வீட்டின் கதவை சாத்தி விட்டு, துாங்கிக் கொண்டிருந்தார். திடீரென எழுந்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த தாய், அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார்.
இதற்கிடையில், காணாமல் போன மூன்று வயது ஆண் குழந்தை நவீன், எர்ணாவூர் – லிப்ட் கேட் அருகே, வழி தெரியாமல், தவித்தப்படி நின்று கொண்டிருப்பதை பார்த்த, எண்ணுார் காவல் நிலையத்தின் காவலரான ராபின் ஜோஸ், குழந்தையை மீட்டுள்ளார்.
சுனாமி குடியிருப்பில் குழந்தையை காட்டி விசாரித்த போது, எட்டாவது பிளாக்கில் குழந்தை மாயமானதாக பெற்றோர் தேடி கொண்டிருப்பது குறித்து, காவலருக்கு தகவல் சொல்லப்பட்டது. அங்கு, குழந்தையுடன் சென்ற காவலர் ராபின் ஜோஸ், தாய் பிராபவதியிடம் குழந்தையை ஒப்படைத்தார்.காவலரின் இந்த செயலை சக காவலர்கள் வெகுவாக பாராட்டினார்.