மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. மதுரை, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர். சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹர ஹர சங்கரா சிவாய சங்கரா என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.

அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக காட்சி அளித்து வருகிறார். சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். திருக்கல்யாணத்தை காணமுடியாத பக்தர்களுக்கு சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் எழுந்திருளியுள்ளனர். கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி என நான்கு மாசி வீதிகளில் தேர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையே தேர் அசைந்து வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *