கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ஆம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. பா.ஜக. சார்பாக பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்கனவே சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். அந்த கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி 3-வது கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

பெல்லாரி, துமகூரு புறநகர் தொகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதை தொடர்ந்து பெங்களூருவில் 17 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களை கவரும் விதமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் ஒட்டு மொத்தமாக 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை பிரதமர் மோடி ஊர்வலத்தை தொடங்கினார். பெங்களூரு தெற்கு பகுதியில் ஆர்.பி.ஐ. மைதானத்தில் சோமேஸ்வரா பவனில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரதமர் மோடி உற்சாகமாக பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார். ஆ.பி.மைதானம் முதல் மல்லேசுவரத்தில் உள்ள சாங்கி டாங்கி வரை 26½ கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் திரளாக கூடி நின்று பிரமர் மோடியை பார்த்து கையசைத்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. பிரதமர் மோடி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை 35 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த சாலைகளில் உள்ள கடைகளை காலையில் திறக்கவும் போலீசார் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி வரும் பாதையில் தூவுவதற்காக சாலை ஓரமாக மலர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *