கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில், விதைகள் அறக்கட்டளை மற்றும் ஆரம்பம் மலர் பத்திரிகை சார்பில் ஏழை, எளிய மக்கள், மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவ, மாணவியருக்குப் புத்தகப்பைகள், ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி, சட்டை, சேலை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விதைகள் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைமை அறங்காவலருமான ஜி. மூர்த்தி, தலைவர் எஸ்.கே. காளிராஜ், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் வாசு, கோபி, ஆனந்தகுமார், ராஜா நாகராஜ், சசிகுமார், ராஜா உள்ளிட்டோர் சிறப்பாகச் செயல்பட்டு விழாவை ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சிநேகராம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் விசுவநாதன், மெடிக்கல் யூ. நாராயணன், சிவசக்தி சேவை அறக்கட்டளை தலைவர் தங்கராஜ், ஸ்ரீ முத்துக்குமரன் ட்ரேடர்ஸ் தலைவர் செந்தில் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
அப்போது மரக்கன்றுகள் நடுதல், அவற்றை முறையாகப் பராமரித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற நல்ல செயல்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும் மாணவ, மாணவியருக்கும் எடுத்துரைத்தனர். மேலும், மக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி விழாவைச் சிறப்பித்தனர்.
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கல்வியை ஊக்குவித்தல், மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் சமூக நலனை முன்னிறுத்துதல் எனப் பல்வேறு நோக்கங்களுடன் செயல்பட்டு வரும் விதைகள் அறக்கட்டளையின் இத்தகைய சேவைகள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றன.
விதைகள் அறக்கட்டளையின் சமூகநலப் பணிகள் மேலும் சிறந்து வளரவும், அதன் சேவைகள் தொடர்ந்து பலருக்கும் சென்றடையவும் வாழ்த்துகள்!