தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 12-வது வார்டில், ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் எட்டையாபுரம் பிரதான சாலை பகுதிகளில் செயல்பட்டு வரும் பழைய பொருட்கள் சேகரிக்கும் கடைகளில் இன்று டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, இரண்டு கடைகளிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, விதிமுறைகளை மீறிய இரு கடைகளுக்கும் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் கடைகளைச் சுற்றி குப்பைகள் சேராமல் பராமரிப்பதுடன், தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.