கல்பாக்கம், அக். 16:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் (TANSACS) மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி./எய்ட்ஸ் செயல் திட்டம் (DISHA) ஆகியவற்றின் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை சார்பில், மேம்படுத்தப்பட்ட களப்பணியின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
காட்டாங்குளத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் அருகே உள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சியில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற இம்முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், ஊராட்சி உதவியாளர் டில்லிபாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.
ரியல் அறக்கட்டளை நிறுவுநர் முனைவர் லாரன்ஸ் வழிகாட்டுதலின்படியும், சுகாதாரத் திட்டப் பணிகள் மருத்துவர் செந்தில் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி./எய்ட்ஸ் மையத்தைச் சேர்ந்த குமாரசாமி, பேபி, பபிதா ஆகியோரின் ஆலோசனையின்படியும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்மாபேட்டை ஸ்ரீ சத்திய சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் நேஹா, கிரிதர், ஜோ பேஜய், துர்கா, அவிஷாந்த், ஜான்சி திரிஷா, அபினேஷ், ஹரிணி மற்றும் செவிலியர் அனிதா ஆகியோர் மருத்துவச் சேவைகளை வழங்கினர். மேலும், மக்கள் தொடர்பு அலுவலர் வேளாங்கண்ணி, கேளம்பாக்கம் ஆய்வக நுட்புநர் லலிதா, நடமாடும் நம்பிக்கை மையப் பணியாளர்கள் பத்மபிரியா, அர்ச்சனா, ரியல் திட்ட மேலாளர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் கீர்த்தனா, மலர்விழி, சாந்தி, கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்முகாமில் 80-க்கும் மேற்பட்ட இலக்கு மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர். கண், தோல், எலும்பு மற்றும் பொது மருத்துவப் பரிசோதனைகளுடன், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி உள்ளிட்டவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.